முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 300 கொடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் கோவில் கோபுரம், வள்ளி குகை, கோவில் வளாகப்பணிகள், கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள், தங்கும் விடுதிகள் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வந்தது. கடந்த 2 தினனக்குக்கு முன்பு பாஜக மத்திய அரசு நலப்பிரிவு தெற்கு மாவட்ட செயலாளர் பிரித்திவிராஜன் ஒரு வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையில் அனைத்து பொருட்களும் சேதமடைந்துள்ள நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக கட்டப்பட்ட வெஸ்டர்ன் கழிவறையில் மேலே வைக்கும் டேங்க் இல்லை. கழிவறையில் பல பொருட்கள் காணாமல் போனதாகவும், தரமாக கட்டவில்லை என்றும் குற்றம் சாட்டி இருந்தார். இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் திருச்செந்தூர் பகுதியில் உள்ள பிரித்திவிராஜ் இல்லத்துக்குநேற்று அதிகாலை போலீசார் சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை.
இதையும் படிங்க: மருதமலை முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு.. நீதிமன்றத்தில் உறுதி அளித்த தமிழக அரசு..!

அவரது வீட்டில் இருந்த உறவினர்கள், எதற்காக வந்துள்ளீர்கள்? வாரண்ட் உள்ளதா? எந்த வழக்கில் அவரிடம் விசாரணை செய்யப்பட வேண்டும்? எனக் கேட்டனர். அதற்கு 2023 ஆம் ஆண்டு அவர் மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வந்துள்ளோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 4 மணிக்கு வந்து பிரித்திவிராஜை விசாரணைக்கு அழைத்து செல்ல என்ன அவசியம் உள்ளது என்று அவர்கள் கேட்டதற்கு போலீசார் மௌனமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு காத்திருந்த போலீசார் அதன்பின் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இந்நிலையில், போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருச்செந்தூர் திருக்கோவிலில் பல நூறு கோடி செலவில் ஆலய மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றதாகத் திமுக அரசு கூறியது. ஆனால், அங்கு அடிப்படை வசதிகள் கூட முறையாகச் செய்யப்படவில்லை என்பதைத் தொடர்ந்து செய்திகளில் கண்டு வருகிறோம். இந்நிலையில், கோவிலுக்குள் பக்தர்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும் கழிப்பறைகளின் அவல நிலையைக் காணொளியாக வெளியிட்ட தமிழக பாஜகவைச் சேர்ந்த பிரதீப்ராஜன் வீட்டிற்கு, அதிகாலை நான்கு மணிக்குக் போலீசாரை அனுப்பி மிரட்டியிருக்கிறது திமுக அரசு.

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் தி.மு.க, தனது ஊழலை மக்கள் மத்தியில் வெளிப்படுத்துபவர்கள் மீது, போலீசாரையோ, குண்டர்களையோ ஏவுவது வழக்கமாகி இருக்கிறது. தி.மு.க., அரசின் இந்த அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழகத்தில் வரும் 2026 ம் ஆண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்போது, ஹிந்து சமய அறநிலையத் துறையைச் சுரண்டிக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவரும், சிறைக்குச் செல்வது உறுதி. என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உக்ரைன் போர் நிறுத்தம்: 12 மணி நேரம் நீடித்த அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: ரஷ்யாவின் முடிவு இதுதான்..!