டாஸ்மாக நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். சென்னை அடுத்த கானத்தூரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட அண்ணாமலையை, அக்கரை அருகே தடுத்து நிறுத்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய விவகாரம் சூடுபிடித்துள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தொடர்ச்சியாக தமிழக அரசை விமர்சித்து வருகிறார்.
இதையும் படிங்க: இது மக்கள் ஆட்சியா? மாஃபியா ஆட்சியா? வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பாஜக தலைவர்கள்.. அண்ணாமலை, ஹெச்.ராஜா கண்டனம்..!

இதன் ஒரு பகுதியாக, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை அறிவித்து இருந்தார். இதனிடையே முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க இருந்த பாஜகவின் முக்கியத் தலைவர்கள் பலரும் காலை முதலே கைது செய்யப்பட்டு வந்தனர். முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா, துணைத்தலைவர் சக்ரவர்த்தி, பாஜக எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், சரசுவதி போன்றோர் அவரவர் வீடுகளில் வைத்தும் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் வைத்தும் கைது செய்யப்பட்டனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக கானாத்தூரில் உள்ள தனது வீட்டில் இருந்து கருப்புச்சட்டை அணிந்தபடி புறப்பட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அவரை அக்கரை வரும் வழியில் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். நீலாங்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.

அப்போது பேசிய அண்ணாமலை, 2024 பாராளுமன்றத் தேர்தலை டாஸ்மாக் முறைகேடு பணத்தில் தான் திமுக நடத்தி வெற்றி பெற்றதாக குற்றஞ்சாட்டினார். இந்தியாவிலேயே நம்பர் ஒன் குற்றவாளி அமைச்சர் செந்தில் பாலாஜி தான் என்றும் அவர் விமர்சித்தார். மேலும் டாஸ்மாக் ஊழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முதல் குற்றவாளி என்று குறிப்பிட்ட அண்ணாமலை, டாஸ்மாக் ஊழல் தொடர்பாக முதலமைச்சர் வீட்டை முற்றுகையிடுவோம் என எச்சரித்தார். டாஸ்மாக் முறைகேடு குறித்து வெள்ளை அறிக்கை தர அமைச்சர் செந்தில் பாலாஜி தயாரா.? என்றும் அண்ணாமைலை கேள்வி எழுப்பினார்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பான பாஜகவின் போராட்ட அறிவிப்பும், அடுத்தடுத்த கைதுகளும் தமிழக அரசியல் களத்தை அனல் பறக்கச் செய்கிறது.
இதையும் படிங்க: தொடைநடுங்கி திமுக அரசு... அண்ணாமலை ஆவேசம்...!