கட்சி மாநாட்டுக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் தமிழக அரசுக்கு எதிராக களம் ஆடுவது அதிகரித்துள்ளது. முன்பை விட வேகமாக தமிழக அரசை, பல்வேறு விவகாரங்களில் புதிய செயலாளர் சண்முகம் கண்டித்து பேசுவதை காண முடிகிறது. இதன் ஒரு பகுதியாக ஜனவரி 9 ஆம் தேதி போக்குவரத்து தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர்.2016 ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணி தோல்வியடைந்த பிறகு தங்களது நிலைப்பாட்டில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்திய இடதுசாரி இயக்கங்கள் அதிமுக ஆட்சிக்கு எதிராக திமுகவுடன் சமூக நீதிக் கூட்டணி அமைத்து களம் கட்டன. இதில் பாஜக உள்ளே வந்து விடும் என்கிற பாணியில் தொடர்ச்சியாக அதிமுக கூட்டணிக்கு எதிராக இடதுசாரிகள் முன்னிலும் வேகமாக செயல்பட்டு வந்தனர். 2019 மக்களவைத் தேர்தல் அதை தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தல், அதை தொடர்ந்து 2024 மீண்டும் மக்களவைத் தேர்தல் என தொடர்ந்து திமுக அணியில் இடதுசாரிகள் இருந்து வருகின்றனர்.

இதற்காக அவர்கள் கொடுத்த விலை அதிகம் என்று சொல்லலாம். குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதன் தொழிற்சங்க போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடியாத கையறு நிலையில் இருப்பதை காண முடிந்தது. எது செய்தாலும் எதிரில் கூட்டணி பலமாக இல்லை என்பதால் அது அமைதியாக இருக்கும் நிலை ஏற்பட்டது.
பாஜக கூட்டணியை எதிர்க்க வேண்டும், பாஜகவுடன் உள்ள அதிமுகவை எதிர்க்க வேண்டும் என்கிற ஒரே மையப் புள்ளியில் திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து திமுகவின் அரசை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதில் பொதுவாக மார்க்சிஸ்டுகள் மக்கள் விரோத விவகாரங்களில் கூட்டணிக்கு வெளியே வந்து போராட்டத்தை தொடங்குவார்கள். ஆனால் கடந்த 2021 இல் திமுக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு விவகாரங்களில் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து போராட முடியாமல் திமுக கூட்டணியில் தொடர்ந்து கொண்டும், திமுக கூட்டணியை ஆதரிக்கும் நிலைக்கும் மார்க்சிஸ்ட் கட்சியினர் தள்ளப்பட்டார்கள்.

இதில் 2021 தேர்தலில் இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பத்து கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்தில் திமுக கணக்கு தாக்கல் செய்தது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரிய இடியாக இறங்கியது. நேர்மையின் சிகரமாக விளங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த விவகாரத்தில் பதில் சொல்ல முடியாமல் திணறியது. அதேபோன்று பல்வேறு தொழிற்சங்க பிரச்சினைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்து வைக்க முடியாமல் கூட்டணி தர்மத்திற்காக அமைதி காத்தது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளுக்குள்ளேயே போராட்டங்கள் வெடித்தன.
மக்களை பாதிக்க விவகாரங்களில் அரசை எதிர்ப்பதை தாண்டி அரசை ஆதரிக்க நிலைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சென்றது கட்சியின் மதிப்பை குறைக்கும் விதமாக அமைந்தது. இதில் மிகப்பெரிய விஷயமாக போக்குவரத்து கழகங்களில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் பணபலன்களை கடந்த அதிமுக அரசு தரவில்லை என்கின்ற நிலையில் பெரும் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் நடத்தினர். அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் 100 நாளில் திமுக ஆட்சி அமைந்துவிடும் அனைத்து பிரச்சனைகளும் தீர்த்து வைக்கிறேன் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
அதை நம்பி போராட்டத்தை கைவிட்டதோடு அல்லாமல் திமுகவுக்கும் தங்கள் முழு ஆதரவை போக்குவரத்து தொழிலாளர்கள் வழங்கினர். இதேபோன்று கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் தங்களுக்காக புதிய அரசாங்க அமைந்தால் நல்லது நடக்கும் என்று நம்பினர். இதேபோன்று ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என பலரும் தங்களுக்கு திமுக ஆட்சி அமைந்ததும் நல்லது நடக்கும் என்று நம்பி வாக்களித்தனர்.
இதையும் படிங்க: எதிர்கட்சிகள் பக்கம் கேமரா திரும்பாதா? - இபிஎஸ் கேள்வி...
இதில் போக்குவரத்து தொழிற்சங்கத்தில் முன்னணி சங்கமாக இருக்கும் சிஐடியு, திமுகவுக்காக முன்னணி பிரச்சார பேரணியாக மாறி தாங்கள் திமுக ஆட்சி வந்தவுடன் பல பலன்களையும், மற்ற உரிமைகளையும் பெற்று தருவதாக தொழிலாளர்களுக்கு வாக்குறுதி அளிப்பதில் முன் நின்றன. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுகவை விட மோசமாக செயல்பட தொடங்கியது மார்க்சிஸ்ட்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக மின்வாரியம், டாஸ்மாக், போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முந்தைய அதிமுக அரசை விட மோசமாக திமுகவின் செயல்பாடுகள் இருந்ததால் தோழர்கள் எதுவும் சொல்ல முடியாமல் உள்ளுக்குள் புழுங்கிய நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் மீண்டும் வெடித்தது. அப்பொழுது தலையிட்ட தமிழக அரசு, நீதிமன்றத்தில் இந்த பிரச்சனையை கொண்டு சென்றது. நீதிமன்றம் போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை உணர்ந்து, பண்டிகை காலத்தில் போராட்டத்தை நடத்த வேண்டாம், உங்கள் போராட்டத்தை ஒத்தி வையுங்கள், அரசோடு பேசி தீர்வு காணுங்கள் என்று சொன்னதன் அடிப்படையில் போராட்டம் நிறுத்தப்பட்டது. ஆனாலும் எந்தவித தீர்வும் கிடைக்காத காரணத்தினால் மீண்டும் ஜனவரி 9 ஆம் தேதி போராட்டத்தை துவங்க உள்ளதாக என்று சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திமுகவுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தொடர்ந்து முட்டல் மோதல் அதிகரித்து வரும் நிலையில் போராட்டங்கள் எதுவும் நடத்த விடாமல் தடை செய்வதும், சாம்சங் தொழிற்சாலையில் தொழிற்சங்கம் ஆரம்பிக்க விடாமல் அரசே முன் நின்றதும் மார்க்சிஸ்ட்டுகளுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்தது.

இந்நிலையில் முந்தைய மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் திமுக அரசுக்கு தொடர்ந்து ஆதரவாக செயல்பட்டு வந்ததும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் எதிரொலித்தது. மாநாட்டில் பேசிய பல தோழர்கள் தொழிற்சங்கங்களை கட்சி எதற்காக கட்டுப்படுத்துகிறது எங்களை சுயமாக செயல்பட விடுங்கள், அரசுக்கு ஆதரவாக தொழிற்சங்க தலைவர்களை போராட விடாமலும், பேட்டி அளிக்க விடாமலும் தடுத்து வருகிறீர்கள் இது எந்த வகையில் நியாயம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதன் தனித்தன்மை இழந்து விட்டது, தலைவர்கள் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு கட்சியை முடமாக்கி விட்டனர் என குற்றம் சாட்டினர்.
கட்சி மீண்டும் பழையபடி மக்கள் நலப்பணியில் இறங்கி செயல்பட வேண்டும். கூட்டணி என்ற கோட்பாடு நமது கட்சி இல்லாத நிலையில் எதற்காக கூட்டணியாக செயல்பட்டு அவப்பெயரை தேடிக் கொள்கிறீர்கள் என்றெல்லாம் கடுமையான விமர்சனத்தை வைத்தனர். இதை அடுத்து கே.பாலகிருஷ்ணன் தன்னிலை விளக்கமாக சில விஷயங்களில் தன்னுடைய இயலாமையை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் நீக்கப்பட்டு புதிய செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டார்.
பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டவுடன் தான் மக்கள் நலப் பணியில் மக்களுக்கான போராட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்கிறதே தவிர திமுகவின் நிழலில் நாங்கள் இல்லை என்று பேட்டி அளித்தார்.

தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் தமிழக அரசின் செயல்பாடுகளை, காவல்துறையின் செயல்பாடுகளை அவர் கண்டிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சிஐடியு தங்களது போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தில் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். ஜனவரி 9 அன்று போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் யின் தொழிற்சங்க அமைப்பு சிஐடியூ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொழிலாளர்கள் போராட்டம் வலுத்தால், ஜனவரி 10 தேதிக்கு மேல் பொங்கல் விடுமுறைக்காக வெளியூர் செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த போராட்டத்தில் இறங்கி உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுகவின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஒத்துக்கொண்டு இயங்குவதில்லை என்கிற முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்துள்ளது. தோழர்கள் போராட்டக் குணத்திற்கு, மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்து விட்டார்கள் என்று கட்சிக்குள் பேசிக்கொள்கிறார்கள்.
இதையும் படிங்க: இன்னைக்கும் தரமான சம்பவம் இருக்கு...! சட்டப்பேரவைக்குள் நுழைந்த அதிமுகவினரைப் பார்த்து விழிபிதுங்கிய திமுக!