கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள குந்துக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. (வயது 48). கூலி தொழிலாளி. இவர் நேற்று அஞ்செட்டியில் இருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி சென்ற 27 ஆம் நம்பர் அரசு பஸ்ஸில் ஏறி சென்றுள்ளார். அப்போது அவர் அதீத மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பஸ் கன்டக்டர் அவரிடம் பயணத்திற்காக டிக்கெட் எடுக்கும் படி கேட்டுள்ளார். அப்போது போதையில் இருந்த கோவிந்தசாமி டிக்கெட் எல்லாம் எடுக்க முடியாது எனக்கூறி கன்டக்டரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். நடத்துனர் எவ்வளவோ முறை சொல்லிப்பார்த்தும் கோவிந்தசாமி வழிக்கு வருவதாய் தெரியவில்லை.

பொறுத்துப்பார்த்து பொறுமை இழந்த பஸ் டிரைவர் சிவ பிரசாத், போதை ஆசாமி கோவிந்தசாமியை பஸ்ஸில் இருந்து கீழே இறக்கி விட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தசாமி, கீழே கிடந்த கல்லை எடுத்து பஸ் கண்ணாடியை உடைக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். என்னை ஒழுங்க என் ஊரில் இறக்கி விட்டுவிடுங்கள். இல்லையின பஸ் முழுசா ஊருக்கு போகாது என்கிற ரீதியில் போதையில் பேசி உள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் மற்றும் பஸ்ஸில் பயணித்த சக பயணிகள் அவரை சமாதானப்படுத்தி உள்ளனர். ஆனாலும் கோவிந்தசாமி கேட்பதாக இல்லை. டிரைவர் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 6 வயது மகனை துடிக்க துடிக்க கொன்ற தாய்.. மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடூரம்.. ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு..!


வேறு வழியில்லாமல், மன்னிப்பு கேட்பதாகவும், பஸ்ஸில் ஏறும் படியும் டிரைவர் சிவ பிரசாத் தெரிவித்துள்ளார். நடத்துனரும் கோவிந்தசாமி கெஞ்சியபடியே பஸ்ஸில் ஏற்றி உள்ளார். அவர் ஏறியதும், தேன்கனிக்கோட்டையில் வண்டியை நிறுத்தாமல், ஒரே பிடியாக தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்திற்கு வண்டியை ஓட்டிச் சென்றார் டிரைவர் சிவ பிராசாத். போதையில் ரகளையில் ஈடுபட்ட கோவிந்தசாமியை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் செய்த அலப்பறை குறித்து ஓட்டுநர் சிவப்பிரசாத் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், மது போதையில் இருந்த கோவிந்தசாமிக்கு போதையை தெளிய வைத்தனர். பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் ஓட்டுநரையும் நடத்துநரையும் தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக கோவிந்தசாமியை போலீசார் கண்டித்துள்ளனர். மிரண்டு போன கோவிந்தசாமி பெட்டிப்பாம்பாக அடங்கிஅனைவரிடமும் மன்னித்து விடும்படி கூறினார். டிரைவரும், கன்டக்டரும் அவரை எச்சரித்து மட்டும் விடும்படி போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து கோவிந்தசாமியை கண்டித்த போலீசார், இனிமேல் இது போன்ற தவறுகளில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை.. தொழில் போட்டி காரணமா..? போலீசார் விசாரணை..!