திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள கனவாய் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 45). இவருக்கு திருமணம் ஆகி இவர் திண்டுக்கல் ஜி .டி .என் சாலை திருநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தன்னை( FOOD SAFETY OFFICER - FSO)உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எனக் கூறி வந்துள்ளார்.
மேலும் பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், வடமதுரை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உணவகங்களுக்கு ஆய்வு நடத்த வந்ததாக கூறி வசூல் வேட்டையும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள கே. கே. பிரியாணி கடைக்கு ஆய்வுக்கு செல்வது போல் சென்றுள்ளார் சண்முக சுந்தரம்.

நேராக கடைக்கு சென்ற சண்முக சுந்தரம், அங்கு கடையில் ஒரு பெண் பணியாளர் மட்டும் உள்ளதை அறிந்து கொண்டார். உடனே பிரியாணி கடையின் உரிமையாளர் எழில் என்பவரின் தொலைபேசி எண்ணை அந்த பெண்ணிடம் கேட்டு பெற்றுள்ளார். அதன் பின், எழிலுக்கு தொடர்பு கொண்டு, உங்கள் கடைக்கு ஆய்வு செய்ய வந்துள்ளோம்.
ஆய்வுக்கு வருகை தந்துள்ள நபர்களுக்கு பணம் கொடுத்து சரிகட்டி விடலாம். ஒன்னும் பிரச்னை இல்லை. நான் பேசிக் கொள்கிறேன் என இஷ்டத்துக்கு அளந்து விட்டுள்ளார். தங்களின் கடைக்கு எதிர்ப்புறம் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் முன் நிற்கிறோம். உடனே எனது எண்ணுக்கு gpay 500 ரூபாய் பணம் அனுப்புங்கள் என கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: விடுதி உரிமையாளர் கொலை.. உடலை துண்டு துண்டாக்கி.. கேம்ப் பயரில் வைத்து எரித்த அவலம்..!

ஆய்வுக்கு வந்த நபர், எந்த வித ஆய்வும் மேற்கொள்ளாமல், 500 ரூபாய் பணம் கேட்டதால் சந்தேகம் அடைந்த பிரியாணி கடை உரிமையாளர் எழில், 10 நிமிடத்தில் அனுப்பி வைக்கிறேன் என கூறிவிட்டு போனை வைத்துள்ளார். அதன் பின் திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செல்வத்திடம் தொடர்பு கொண்டு சண்முகசுந்தரம் என்ற நபர் பணியாற்றுகிறாரா? என்று கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது போன்ற நபர் எங்கள் அலுவலகத்தில் யாரும் பணிபுரியவில்லை என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறி உள்ளனர். அதன் அடிப்படையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நபரின் தொலைபேசி எண்ணை போலீசாருக்கு அளித்து புகார் கூறி உள்ளனர்.

மேலும் அவர் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரூபாய் 500 தர வேண்டும் என கூறிய தொலைபேசி பதிவையும் வைத்து உணவகப் பாதுகாப்பு சங்கத்தினர் சார்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் தொலைபேசி உரையாடலையும் வைத்து நகர் வடக்கு போலீசார் போலி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சண்முகசுந்தரத்தை இரண்டு பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உணவகங்களில் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளுக்கு 500 ரூபாய் தர வேண்டும் என பிரியாணி உரிமையாளரிடம் கேட்டு சிறைக்குச் சென்ற போலி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: திடீரென கேட்ட பயங்கர சத்தம்... குலுங்கிய வீடுகள்... பீதியில் திண்டுக்கல் மக்கள்...!