கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக இதனை தொடர்ந்து முழங்கி வருகிறது. குறிப்பாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்தியா போன்ற பன்மைத்துவம் நிறைந்த நாட்டில் பொது சிவில் சட்டம் சாத்தியமா என பல்வேறு அரசியல் கட்சி இயக்கங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன. பல்வேறு மதத்தினர், பல்வேறு இனக்குழுவினர் அவர்களுக்கான தனித்துவமான சட்டங்கள், வாழ்க்கை முறைகள் உள்ளபோது அவர்களை பொதுசிவில் சட்டம் என்ற குடையின் கீழ் கொண்டு வருவது எந்த அளவுக்கு நடைமுறைக்கு ஒத்து வரும் என்பது பலரின் ஐயப்பாடு. இதனை முயற்சித்துப் பார்க்கும் களமாக பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்றுமுதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

70 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட்டின் மக்கள்தொகை ஒரு கோடியே 86 ஆயிரம் பேர். இவர்களில் 35 சதவிதத்தினர் ராஜ்புத் எனப்படும் தாக்கூர் சாதியைச் சேர்ந்தவர்கள். 20 சதவிதம் பேர் பிராமணர்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக கர்வாலி, குமாவோன் ஆகிய இனக்குழுக்களை உள்ளடக்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 18 சதவிதம் உள்ளனர். பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களும் 18 சதவிதமாக உள்ளனர். இவர்கள் மட்டுமல்லாது ஜன்சாரிகள், போடியாக்கள், தரஸ், புக்ஸாஸ், ஜாட்ஸ், பன்ராவட்ஸ் ஆகிய பழங்குடியினத்தவர் 3 சதவிதம் வசிக்கின்றனர். இவர்கள் மட்டுமல்லாது ஷெளகாக்கள், குர்ஜார்கள் போன்ற பட்டியலிடப்படாத பழங்குடியினர் சமூகத்தினரும் உத்தரகாண்டில் உள்ளனர்.
இதையும் படிங்க: விரைவில் பொது சிவில் சட்டம்: விதிமுறைகளை ஏற்றது உத்தரகாண்ட் அமைச்சரவை...
மேற்சொன்ன ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனியான திருமண சடங்குகள், இறப்புச் சடங்குகள், உறவுமுறைகள், வழிபாட்டு முறைகள் உள்ளன. இதுமட்டுமல்லாது இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என பெருமதங்களைச் சார்ந்தோருக்கு என்று சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த பொதுசிவில் சட்டம் இவற்றை எவ்வாறு ஒற்றை புள்ளியில் இணைக்கும் என்ற கேள்வி இருந்தது.

இதற்காக முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, கடந்த 2022-ம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சன் பிரகாஷ் தேசாய் தலைமையில் நிபுணர் குழு ஒன்றை அமைத்தார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் மாநிலத்தின் அனைத்துப் பிரிவினரிடமும் இக்குழு கருத்துக்களை கேட்டறிந்தது. இதன்பின்னர் வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கான சிறப்பு சட்டங்களை வகுக்க முன்னாள் தலைமைச் செயலாளர் சத்ருகன் சிங் தலைமையில் மற்றொரு குழு உருவாக்கப்பட்டது. அவர்களும் பொது சிவில் சட்டத்தின் வரம்புகளை சீரமைத்தனர். இதன்பின்னர் ஜனவரி 27-ந் தேதி முதல் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வரும் என முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அறிவித்தார்.
மாநிலத்தின் குடிமக்கள் அனைவரையும் சமமாக இச்சட்டம் பாவிக்கும் என்றும், நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் வேள்வியில் உத்தரகாண்ட் முதல் மாநிலமாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளதாகவும் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.

சுதந்திரத்திற்கு பிறகு நாட்டில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களில் இச்சட்டத்தை விரைந்து செயல்படுத்த பாஜக தலைமை ஆர்வம் காட்டி வருகிறது.
இதையும் படிங்க: 4 டன் மிளகாய் பொடி வாபஸ்: சாமியார் பாபா ராம்தேவ் பதஞ்சலி நிறுவனம் திரும்பப் பெற காரணம் என்ன?