ஹரியானாவில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) புயலென வெற்றி பெற்று, பத்து மாநகராட்சிகளில் ஏழு மேயர் பதவிகளை கைப்பற்றியது. மேலும் இரண்டு இடங்களில் முன்னிலையில் உள்ளது. 2024 சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ், இதிலும் பின்னடைவை சந்தித்தது. இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பாஜகவின் ஆதிக்கத்தை மீண்டும் உறுதி படுத்தி உள்ளது.

குருகிராம், மனேசர், பரிதாபாத், ஹிசார், ரோஹ்டக், கர்னால், யமுனாநகர் ஆகிய ஏழு மாநகராட்சிகளில் மேயர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க மார்ச் 2-ல் வாக்குப்பதிவு நடந்தது. அம்பாலா, சோனிபட் மேயர் பதவிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் 21 நகராட்சி கமிட்டிகளுக்கான தேர்தல்களும் அன்று நடைபெற்றன. பானிபட் நகராட்சிக்கு மார்ச் 9-ல் தேர்தல் நடந்தது. பாஜக, அம்பாலா, பரிதாபாத், குருகிராம், ஹிசார், கர்னால், ரோஹ்டக், சோனிபட் ஆகியவற்றில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றது.
இதையும் படிங்க: காஸ்ட்லி 'லெஹங்கா' அணியாத மணமகள்... வாள் சண்டை போட்ட சம்மந்திகள்... போர்க்களமான திருமண மண்டபம்..!
யமுனாநகர், பானிபட்டில் பாஜக முன்னிலை வகிக்கிறது. மனேசரில் முதல் முறையாக நடந்த தேர்தலில், சுயேட்சை இந்தர்ஜீத் யாதவ், பாஜகவின் சுந்தர் லாலை 2,293 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பரிதாபாத்தில் பாஜகவின் பரவீன் ஜோஷி 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளால் வென்றார். குருகிராமில் ராஜ் ராணி 1.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சோனிபட்டில் மூத்த தலைவர் ராஜீவ் ஜெயின், கர்னாலில் ரேணு பாலா குப்தா ஆகியோரும் வென்றனர். முன்பு, பத்து நகராட்சிகளில் எட்டு மேயர்கள் பாஜகவை சேர்ந்தவர்களாக இருந்தனர். சோனிபட்டின் நிகில் மதான் (காங்கிரஸ்-பாஜகவுக்கு மாறினார்) மற்றும் அம்பாலாவின் சக்தி ராணி சர்மா (ஹரியானா ஜன்சேத்னா-பாஜகவுக்கு மாறினார்) 2024 சட்டப்பேரவை தேர்தலில் வென்றனர்.

ஹரியானா மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து வாக்கு எண்ணிக்கையை நடத்தியது. முதல்வர் நயாப் சிங் சைனி, மத்திய, மாநில, உள்ளாட்சி அளவில் “மும்முனை அரசு” உருவாகி மூன்று மடங்கு வேகத்தில் பணிகள் நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன் பல காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவுக்கு தாவியதால் பின்னடைவை சந்தித்தது. உட்கட்சி பூசல்களும் காங்கிரஸ் கட்சியை பெரிய அளவில் பலவீனப்படுத்தியுள்ளது. பாஜகவின் வலுவான அடித்தள அமைப்பு, ரோஹ்டக் போன்ற காங்கிரஸ் கோட்டையிலும் அடித்து நொறுக்கி வெற்றியை பதிவு செய்துள்ளது ஹரியானா பாஜக.
இதையும் படிங்க: சொத்துக்காக தாயை அடித்து கொடுமை படுத்தும் மகள்.. என்னை விட்டுவிடு என கதறி துடிக்கும் தாய்..