பொங்கல் பண்டிகையின் விடுமுறை நாளை திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர்.

ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்த போதும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரியை கண்டு களித்தனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய அந்த நிகழ்ச்சி 10 மணி வரை நீடித்தது. நெல்லை மட்டுமல்லாது தென்காசி, குமரி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஒருசிலர் வெளிநாடுகளில் இருந்தும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க நெல்லையில் குவிந்தனர்.
இதையும் படிங்க: உச்ச நட்சத்திரங்கள் முன்னிலையில் ..காதலியை கரம்பிடித்த தெருக்குரல் அறிவு..!

பெரும் வரவேற்பை இந்நிகழ்ச்சி பெற்றதையடுத்து இனி ஒவ்வொரு ஊரிலும் எனது இசைநிகழ்ச்சி நடைபெறும் என்றும் அடுத்து எந்த ஊர் என்றும் கேள்வி எழுப்பி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் இளையராஜா. தற்போது சில ஊர்களின் பெயர்களை குறிப்பிட்டு புதிய பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்
"சேலம், திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, வேலூர், கடலூர்... உங்களை எல்லாம் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன்! தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1976-ல் அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான காலந்தொட்டு இந்த 2025 வரை தமிழர்களின் வாழ்வோடு இரண்டற கலந்து விட்டவர் இளையராஜா. 1500 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து 7 ஆயிரம் பாடல்களுக்கு மேல் தந்து இன்றளவும் அதன் இனிமை குன்றாமல் ஓடிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான விடுதலை -2, ஜமா ஆகிய படங்களில் கூட இளையராஜாவின் தனித்துவமான இசை நம்மை தாலாட்டியது. புதிய இயக்குநர்கள் எடுக்கும் படங்களில் இளையராஜாவின் பாடல்கள் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகி விட்டது.

உலகம் முழுவதும் இசைக்கச்சேரிகளை நடத்திக் கொண்டிருந்த இளையராஜா, கடந்த ஆண்டு கும்பகோணத்தில் முதன்முறையாக சென்னைக்கு வெளியே இசை நிகழ்ச்சியை நடத்தினார். அதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தற்போது நெல்லையில் நடத்தி முடித்து இருக்கிறார். அடுத்த ஊர்களுக்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளார். 82 வயதாகும் இளையராஜா, பெயருக்கு ஏற்றார்போல் இளைஞன் போலவே சுறுசுறுப்புடன் ஓடி புதிய படங்களுக்கு இசையமைப்பதும், இசைக் கச்சேரிகளை நடத்துவதும் எல்லோரிடத்தும் உற்சாகத்தை தொற்ற வைக்கிறது.
இதையும் படிங்க: சூர்யா ரசிகர்களுக்கு பொங்கல் பரிசு ..ரெட்ரோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!