தென்காசி மாவட்டம், கடையம், பணகுடியை சேர்ந்தவர் செல்வகுமார். விவசாயி. இவர் மீது கடையம் போலீஸ் நிலையத்தில் ஆள் கடத்தல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள செல்வகுமார் தினமும் கடையம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடையம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதாவை சந்தித்து தன்னுடைய வழக்கு சம்பந்தமாக செல்வகுமார் பேசியுள்ளார். அப்போது இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா இந்த வழக்கினை சீக்கிரம் முடித்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை வெளியே கொண்டு வருவதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார் இது தொடர்பாக தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலின் பேரில், இன்று (ஏப்ரல் 12) காலை ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளுடன் கடையம் போலீஸ் நிலையத்திற்கு செல்வகுமார் வந்துள்ளார்.
இதையும் படிங்க: 15 லட்சம் ரூபாய் லஞ்சம்.. நெடுஞ்சாலை துறை மேலாளர் கைது.. அதிரடி காட்டிய சிபிஐ..
பின்னர் அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதாவிடம் பணத்தை கொடுத்துள்ளார். அந்த பணத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா கையில் வாங்கியபோது அங்கு மறைந்திருந்த தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணை போலீஸ் சூப்பிரண்டு பால் சுதர் தலைமையிலான போலீசார் அவரை அதிரடியாக மடக்கி கைது செய்தனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதாவிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆள் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள வாகனத்தை விடுவிப்பதற்காக ரூ.30,000 லஞ்சம் வாங்கிய போது போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவம் தென்காசி மாவட்ட காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட விஏஓ.. சுத்துப்போட்ட போலீஸ்.. குளத்தில் குதித்து தப்ப முயற்சி..!