காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகள் ஏஎஸ்பி லெவலில் காவல்துறையில் பணியில் சேர்ந்து பின்னர் டிஜிபியாக ஓய்வு பெறுவார்கள். இதில் இடையில் ஏஎஸ்பியிலிருந்து, எஸ்பி, டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, இறுதியாக டிஜிபி என 30 ஆண்டுகள் பதவி காலம் ஓடிவிடும். இதில் ஒவ்வொரு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் முக்கியமான கனவாக சட்டம் ஒழுங்கு பிரிவில் உயர் அதிகாரியாக பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

எஸ்பி என்றால் மாவட்ட எஸ்பி ஆகவும், டிஐஜி என்றால் சரக டிஐஜியாகவும், ஐஜி என்றால் மண்டல ஐஜி அல்லது சென்னை தவிர மற்ற நகரங்களில் கமிஷனர் ஆகவும், ஏடிஜிபி என்றால் சென்னை உள்ளிட்ட முக்கிய மெட்ரோ நகரங்களில் கமிஷனர் ஆகவும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாகவும், டிஜிபி என்றால் சட்டம் ஒழுங்கு தலைமை டிஜிபி அதாவது HOPF ஆகவும் பணியாற்றுவது பெருமை என்பார்கள்.
இதையும் படிங்க: எலன் மஸ்க், காஷ் பட்டேல் இடையே லடாய்.! மண்டையை பிய்த்து கொள்ளும் ட்ரம்ப்

இதில் ஏடிஜிபி வரை கமிஷனராக மற்ற சட்ட ஒழுங்கு பிரிவில் பணியாற்றுவது என்பது எளிதான காரியம். ஆனால் காவல் துறையில் மிக உயரிய கடைசி பதவியான HOPF எனப்படும் சட்டம் ஒழுங்கு தலைமை டிஜிபி பதவி எல்லோருக்கும் கிடைத்து விடாது. சீனியாரிட்டியே இருந்தாலும் கூட ஆளுகின்ற அரசுகளின் விருப்பத்தின் பெயரிலேயே இந்த பதவி கிடைக்கும். இதற்காக உழைப்பதில் ஐபிஎஸ் அதிகாரிகள் முட்டி மோதினாலும் ஆளுகின்ற அரசின் ஆதரவு பெற்ற சிலருக்கு மட்டுமே கடந்த காலங்களில் இந்த வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

அதிலும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி குறைந்தபட்ச சர்வீஸ் ஆறு மாதம் இருந்தால் மட்டுமே சட்டம் ஒழுங்கு தலைமை டிஜிபி பதவிக்கு (HOPF) பரிந்துரைக்கப்படுவார்கள். சட்டம் ஒழுங்கு தலைமை டிஜிபியாக (HOPF) ஒருவர் பதவியேற்றால் அதிலிருந்து அடுத்த இரண்டு ஆண்டுகள் அல்லது அவர் ஓய்வு பெறும் வரை, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அவர் பதவியில் நீடிப்பார்.

அந்த இரண்டு ஆண்டுகளில் அவரை மாற்றவோ, நீக்கவோ அரசுக்கு அதிகாரம் இல்லை. இதனால் ஆளுகின்ற அரசுகள் கூடியவரை தமக்கு தோதான ஒரு டிஜிபி அந்தஸ்த்து அதிகாரியையேஅவர் டிஜிபி அந்தஸ்தில் ஜூனியர் ஆக இருந்தாலும் அவரை பேனலில் கொண்டு வந்து தங்கள் இஷ்டத்திற்கு அவரை தலைமை டிஜிபி (HOPF) ஆக நியமிப்பார்கள்.

தலைமை டிஜிபியாக நியமிக்க ஐந்து டிஜிபிக்கள் கொண்ட ஒரு பேனலை சீனியாரிட்டி அடிப்படையில் தேர்வு செய்து மத்திய அரசுக்கு மாநில அரசு அனுப்புவார்கள். அதில் தன்னுடைய பணிக்காலத்தில் சஸ்பெண்ட் வேறு சில பிரச்சனைகளை, ரிமார்க் ஆகி இருந்தாலும், வேறு சில வழக்கு பிரச்சினைகள் சிக்கியிருந்தாலும் அவர் பெயர் பரிசீலிக்கப்படாது. குறைந்தபட்சம் ஆறு மாதம் பதவி காலம் இருக்கும் ஐந்து பேர் பேனலில் இருந்து, மூன்று பேரை தேர்வு செய்து மத்திய அரசு மீண்டும் மாநில அரசுக்கு அனுப்பும். அதில் ஒருவரை மாநில அரசு தலைமை டிஜிபியாக நியமிக்கும்.

இந்த நடைமுறை இதற்கு முன்னர் இருந்ததில்லை. தங்கள் இஷ்டத்திற்கு டிஜிபியை நியமிக்குவதும், தூக்குவதும், டிஜிபியை உளவுத்துறை டிஜிபியாகவும் பணியாற்ற வைப்பதும், ஓய்வு பெற்ற பின் அவரையே ஆலோசகராக நியமிப்பதும், ஓராண்டு கூடுதல் பணி நீட்டிப்பு செய்வது என பல வேலைகளை மாநில அரசுகள் செய்து வந்தபோது, உச்ச நீதிமன்றம் பிரகாஷ் சிங் என்பவர் தொடுத்த வழக்கில் 2018 ஆம் ஆண்டு சட்டம் ஒழுங்கு தலைமை டிஜிபி (HOPF) நியமனம் குறித்த ஒரு வழிகாட்டுதல் கொண்ட உத்தரவை அளித்தது.

அதன்படி டிஜிபியாக தேர்வு செய்யப்படுபவர் குறைந்தபட்சம் ஆறு மாதம் பதவி காலம் உள்ளவராக இருக்க வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் சட்டம் ஒழுங்கு தலைமை டிஜிபி ஆக நியமித்தப்பின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீக்கவும், மாற்றவும் முடியாது என்கிற பாதுகாப்பையும் அந்த உத்தரவு அளித்தது. அதன் பின்னரே தலைமை டிஜிபி (HOPF) பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. தற்போது விஷயத்திற்கு வருவோம். தமிழகத்தின் தலைமை டிஜிபியாக (HOPF) பதவி வைக்கும் சங்கர் ஜிவால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெருத்த போட்டிக்கிடையே தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டார்.

சீனியர் டிஜிபி ஆன சஞ்சய் அரோகரா டெல்லி போலீஸ் கமிஷனராக இருந்தும் அவர் வில்லிங் கொடுத்தும் அவருக்கு அந்த பதவி வழங்கப்படவில்லை. சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்து பின் வீட்டுவசதித்துறை டிஜிபியாக இருந்த ஏகே விஸ்வநாதன் போட்டியில் இருந்தும் அவரை அதிமுக ஆதரவாளர் என வேண்டுமென்றே பலர் முத்திரை குத்தியதால் அவருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. திமுக குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்கிற கூடுதல் தகுதியுடன் சங்கர் ஜிவால் சென்னை காவல் ஆணையராக பதவி வகித்து வந்த நிலையில் தலைமை டிஜிபி (HOPF) போட்டியில் தேர்வாகி தமிழக சட்டம் ஒழுங்கு தலைமை டிஜிபியாக (HOPF) 2023 ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார்.

அவர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெறுகிறார். ஆனால் அவருடைய இரண்டு ஆண்டுகால (HOPF) பதவி ஜூன் மாதம் முடிவடைகிறது. தலைமை டிஜிபி குறித்த உத்தரவில் தலைமை டிஜிபியாக தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் அந்த பதவியில் இருக்க வேண்டும், அதற்கு பிறகு கூடுதலாக அவர் ஓய்வு பெறும் வரை பதவியில் இருக்கலாம். இதற்கான முடிவை அந்த மாநில அரசே எடுக்க வேண்டும், என்கிற அடிப்படையில் ஜூன் மாதம் பதவிக்காலம் முடிந்தாலும் ஆகஸ்டில் அவர் ஓய்வு பெறுவதால் ஆகஸ்ட் 2025 வரை சங்கர் ஜிவால் தலைமை டிஜிபியாக (HOPF) நீடிக்க வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இந்த விவகாரம் எதையும் தெரியாமல் பத்திரிகையாளர்கள் சிலர் தங்கள் மனம் போனபடி டிஜிபி மீது அதிருப்தி, டிஜிபி மாற்றப்படுவார் என்றெல்லாம் பேசி அது ஒரு விவாத பொருளாக மாறிக் கொண்டிருக்கிறது. டிஜிபியை (HOPF) தமிழக அரசு நினைத்தால்கூட மாற்ற முடியாது. அதிருப்தியாக இருந்தாலும் மாற்ற முடியாது. அதிகபட்சமாக 2015 ஆம் ஆண்டு தலைமை டிஜிபியாக (HOPF) பொறுப்பேற்ற அசோக் குமார் 2016 ஆட்சி மாற்றம் வரும் என நினைத்து கலைஞருடன் சந்திப்பை நிகழ்த்த, 2016 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அவரை விடுப்பில் போக சொல்லிவிட்டார். விடுப்பில் போக மறுத்திருந்தால் அவரை அரசால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அசோக் குமார் விடுப்பில் சென்று விட்டார்.

ஆகவே தற்போது உள்ள சூழ்நிலையில் சங்கர் ஜிவால் மீது ஒருவேளை அரசு அதிருப்தியில் இருந்து விடுப்பில் போக சொன்னாலும் போவதும் போகாததும் அவருடைய இஷ்டம், மேலும் அதற்கான எந்த சூழ்நிலையும் தற்போது இல்லை என்பது தான் உண்மை. சங்கர் ஜீவால் முதல்வர் குடும்பத்துடன் மிக நெருக்கமாக இருப்பவர். குறிப்பாக சபரீசனுடன் மிக நெருக்கமாக இருப்பதாக அறியப்படுபவர். அவரை விடுப்பில் செல்லவும் அல்லது ஜூன் மாதம் முடிந்தவுடன் அவரை வேறொரு பதவிக்கு அனுப்பி விட்டு புதிய சட்டம் ஒழுங்கு தலைமை டிஜிபியை (HOPF) தேர்வு செய்யவும் இந்த அரசு முயலாது என்பதே தற்போதைய தகவல்.

அந்த அடிப்படையில் சங்கர் ஜிவால் தனது பதவி காலம் முடிந்தும், தனது ஓய்வு காலம் வரை கூடுதலாக இரண்டு மாதங்கள் பணியாற்றி விட்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி பணி ஓய்வு பெறுவார் என்பது நமக்கு கிடைத்துள்ள தகவல். இதைத் தாண்டி வரும் தகவல்கள் எல்லாம் நாம் மேல் சொன்னபடி சட்டம் ஒழுங்கு தலைமை டிஜிபி (HOPF) பதவி குறித்த புரிதல் இல்லாமல் உளறுகின்ற உளறலாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து டிஜிபி ரேஸில் யார்? யார்? இருக்கிறார்கள், யாருக்கு வாய்ப்பு என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
இதையும் படிங்க: இந்தியா 200 சதவீதம் வரி போடும்.. அவுங்க தேர்தலுக்கு நிதி கொடுப்பீங்களா.. திரும்பவும் ட்ரம்ப் ஆவேசம்!