தமிழ்நாடு சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அனைத்து கமிஷனர்கள், ஐஜிக்கள், எஸ்பிக்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஏராளமான பெண் காவலர்கள் முகாம் அலுவலகங்களில் கணினி செயல்பாடுகள், தொலைபேசி கையாளுதல் போன்ற பணிகளுக்காக பணியமர்த்தப்படுவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் மற்றும் குற்றங்கள் அதிகரித்து வருவதால், பெண் காவலர்கள் காவல் நிலையங்களில் அதிக எண்ணிக்கையில் இருப்பது மிகவும் அவசியமானது.

காவல் நிலைய பணிகளில் சிறந்த முறையில் பெண் காவலர்களை பயன்படுத்த வேண்டியது அவசியம். பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறை மற்றும் பிற பாலின அடிப்படையிலான குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட முக்கியமான வழக்குகளை கையாள்வதில் பெண் காவலர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். குற்றங்கள் குறித்து புகாரளிக்கும் போது பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள், பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த காவல் நிலையங்களில் பெண் காவலர்கள் இருப்பது அவசியம்.

எனவே, இதை கருத்தில் கொண்டு அனைத்து மண்டல ஐஜிக்கள் மற்றும் அனைத்து காவல் ஆணையர்கள் பெண் காவலர்கள் நிர்வாக பணிகளுக்காக முகாம் அலுவலகங்களில் தேவையற்ற முறையில் தங்க வைக்கப்படுவதை உறுதி செய்ய தேவையான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு அறிவுறுத்துகிறேன். மாறாக காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் மற்றும் களப்பணிகளில் பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். இந்த உத்தரவை கண்டிப்பாக கடைபிடித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை திறம்பட கையாள்வதில் திறனை வலுப்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது”.
இதையும் படிங்க: காவல் நிலையம் முன்பே காதலர்களை விரட்டியடித்த இந்து முன்னணியினர்; வைகை அணை பூங்காவில் அத்துமீறல்...!

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் போக்குவரத்து காவல் உயர் அதிகாரி பெண் காவலரை பாலியல் ரீதியாக சீண்டினார் என்கிற புகாரில் டி.ஐ.ஜி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஏற்கனவே எஸ்.பி ஒருவருக்கு ஐஜி பாலியல் சீண்டல் செய்தார் என்கிற வழக்கில் உயர் நீதிமன்றம் அதிகாரிகள் அறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா வைக்க சொன்னது. ஆனால் அது நடைமுறைக்கு வந்ததா தெரியவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு உயர் அதிகாரி பெண் விவகாரத்தில் சிக்கி சஸ்பெண்ட் ஆனதால் அதன் எதிரொலியாக இந்த உத்தரவு வந்திருக்கலாம் என தெரிகிறது.
இதையும் படிங்க: அறிவாலயத்தின் துகளைக்கூட அசைக்க முடியாது... அண்ணாமலைக்கு முதல்வர் ஸ்டாலின் ஆவேச பதிலடி.!