பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரம் மாபெரும் அரசியல் களமாக மாறி உள்ளது. இதுவரையிலும் கடைபிடிக்கப்பட்டு வந்த விதிகளுக்கு மாறாக, புதிய விதிகளை மத்திய அரசு கடந்த 6-ந் தேதி அறிவித்தது. அதன்படி இனி துணைவேந்தர்களை நியமிக்கும் உரிமைஅ கிட்டத்தட்ட மத்திய பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினர் வசம் போக வாய்ப்புள்ளது.. இது கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநில சுயாட்சியின் உரிமைக்கும் எதிரானது என்பது தமிழக அரசின் வாதம்.

இந்த யூஜிசி-யின் வரைவு விதிகளுக்கு எதிராக இன்று (9/1/25) தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் உயர்கல்வியை பாதிக்கக் கூடிய வகையில் வரைவுக் கொள்கைகள் உள்ளதாக குற்றஞ்சாட்டினார். மாநில அரசு, சிண்டிகேட், செனட் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவினர், துணைவேந்தர்களை தேர்வு செய்யும்போது அதில் பலதரப்பட்ட கருத்துக்கள் பேசப்பட வாய்ப்பு உள்ளதாக கூறிய முதலமைச்சர், புதிய விதிகள் துணைவேந்தர்களை தன்னிச்சையாக தேர்வு செய்ய வாய்ப்பளிக்கிறது என்றார்.
இதையும் படிங்க: புதிய யூஜிசி விதிகள்...அமல்படுத்த துடிக்கும் மத்திய அரசும் தமிழக அரசின் எதிர்ப்பும்..சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் வருமா?
மாநில அரசின் கல்வி நிலையங்களை ஆளுநரின் பெயரால் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஒரு முயற்சியே யூஜிசியின் வரைவு விதிகளின் உள்நோக்கம் என்று மு.க.ஸ்டாலின் காட்டமாக கூறினார். ஏற்கனவே மருத்துவ படிப்புகளில் நீட் தேர்வு என்ற ஒன்றை கொண்டு வந்து ஆண்டுதோறும் அதில் ஆள்மாறாட்டம், குளறுபடி என்பதை நாம் கண்டு வருவதாகவும் அவர் விமர்சித்தார். இந்த வரைவு விதிகளை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் மக்கள் மன்றத்தையும், நீதிமன்றத்தையும் நாடப் போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இதனிடையே மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தில் திமுக மாணவரணியும் பங்கேற்கும் என்று எம்எல்ஏ எழிலரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தி.மு.க. மாணவர் அணி, இந்திய மாணவர் சங்கம் (SFI), திராவிட மாணவர் கழகம், ம.தி.மு.க. மாணவர் அணி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF), முற்போக்கு மாணவர் கழகம் (RSF), முஸ்லிம் மாணவர் பேரவை (MSF), சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI), மாணவர் இந்தியா, கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (CFI), அனைத்திந்திய கிராமப்புற மாணவர் சங்கம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாணவர் அணி, தமிழ்நாடு மாணவர் முன்னணி (TSF) மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு(FSO-TN) இந்த போராட்டத்தை ஒருங்கிணைக்கிறது.
இதையும் படிங்க: கல்வி நிதியில் பிளாக்மெயில் செய்றாங்க ..மாநில பொறுப்பில் இருக்க அக்காவுக்கு.. அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி..!