இந்தியை தவிர வேறுமொழி தெரியாதவர்கள், எங்களை மூன்று மொழிகள் கற்றுக் கொள்ள சொல்வதாக திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக மக்களவையில் பேசியபோது, நாடு முழுவதும் உள்ள வறுமையின் நிலையை கணக்கிட்டு பார்த்தால் தென்னிந்திய மாநிலங்களின் வறுமை குறியீடு 0.5 முதல் 2% வரை தான் உள்ளது என்றும் வட இந்திய மாநிலங்களில் குறிப்பாக பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் வறுமை குறியீடு 9 முதல் 10 சதவீதமாகவும் பீகாரில் 20 சதவீதமாகவும் உத்தரபிரதேசத்தில் 15 முதல் 20 சதவீதமாகவும் உள்ளது என்று குறிப்பிட்டு பேசினார்.

தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா ஆட்சியில் இருந்து ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தற்போது முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி எல்லாருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டில் செயல்படுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்பவர்களின் விகிதம் 25 சதவீதம் தான், ஆனால் தமிழ்நாட்டில் தற்போது 52 சதவீதம் என குறிப்பிட்டார்
இதையும் படிங்க: காமராஜரையே களங்கப்படுத்துகிறார் அண்ணாமலை..! அமைச்சர் சேகர்பாபு காட்டம்..!
10 ஆண்டுகளில் தமிழ்நாடு 8 லட்சம் கோடி வரி செலுத்தியுள்ளது என்றும் ஆனால் எங்களுக்கு திரும்ப கிடைத்தது ரூ. 2.4 லட்சம் கோடிதான் எனவும் தமிழ்நாட்டில் பேரிடர் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் போது கூட மத்திய அரசு பேரிடர் நிதி வழங்குவதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய தேசிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் கல்வி நிதி வழங்குவோம் என மத்திய அரசு மிரட்டுவதாக கூறிய கலாநிதி வீராசாமி, ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தால் கூட மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என முதல்வர் தெரிவித்துள்ளதாக கூறினார். இந்தியா முழுவதும் மூன்று மொழி கொள்கை அமல்படுத்தியதாக மத்திய அரசு கூறுகிறது.,வடமாநிலங்களில் இருந்து வரும் பெரும்பாலான எம்.பி.க்களுக்கு ஆங்கிலம் பேச தெரிவதில்லை என்றும் வட இந்தியாவில் இருக்கும் மக்களுக்கு ஹிந்தியை தவிர வேறு ஏதேனும் மொழி பேச தெரியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

மூன்று மொழிகள் அவர்கள் கற்பதாக கூறுகின்றனர்., ஆனால் ஹிந்தியை தவிர வேறு எந்த மொழியும் அவர்களுக்கு தெரிவதில்லை. ஆனால் தென்னிந்திய மக்கள் மட்டும் மூன்று மொழிகளை கற்க வேண்டும் என்று வற்புறுத்துவதாக குற்றம் சாட்டினார். இருமொழி கொள்கை தமிழ்நாட்டை உயர்த்தி உள்ளது என்று சுட்டிக் காட்டிய கலாநிதி வீராசாமி, சுதந்திரம் அடையும்போது இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது இரண்டாவது பணக்கார மாநிலமாக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: வாக்காளர்களை மொழி மயக்கத்திலேயே வைத்திருக்க நினைக்கிறார்கள்! திமுகவை சீண்டிய ஹெச்.ராஜா