திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மத்திய அரசின் மும்மொழி கொள்கை, இந்தி எதிர்ப்பு என பொதுவெளியில் பலமாக முழங்கி வருகிறார். இந்நிலையில் திருமாவளவனின் இந்தி திணிப்பு எதிர்ப்பு குறித்த உண்மை நிலையை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

இந்தி எதிர்ப்புன் குறித்து ஓரிரு நாட்களுக்கு முன்பு பேசிய திருமாவளவன், ''பாஜகவினர் சமஸ்கிருதத்தை ஏன் உயர்த்தி பிடிக்கிறார்கள் என்றால் அமித் ஷாவின் தாய்மொழி சமஸ்கிருதம் இல்லை. மோடியின் தாய்மொழி சமஸ்கிருதம் இல்லை. மோடியும், அமித்ஷாவும் சமஸ்கிருதத்தை தாய் மொழியாக கொண்ட பார்ப்பனர்களுக்காக எடுபிடிகள். வேலையாட்கள். அதற்காக செய்கிறார்கள். அவர்களுக்காக அந்த அரசியல் செய்கிறார்கள். அவர்களுக்காகத்தான் அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். அதிகாரத்தை வென்றெடுக்க துடிக்கிறார்கள். அவர்கள் என்றால் யார்? அவர்கள் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள். ஆர்எஸ்எஸ் இயக்கம் என்பது அகில இந்திய பிராமணர் சங்கம். அது பிராமணர்களுக்காக உருவாக்கப்பட்ட சங்கம்.

இன்றைக்கு அது இந்துக்களின் சங்கமாக மாற்றி வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு அஜெண்டா இருக்கிறது. அந்த அஜெண்டா அடிப்படையில்தான் தேசிய கல்விக் கொள்கை வரையறுக்கப்பட்டு இருக்கிறது. அந்த அஜெண்டாவில் என்ன சொல்கிறார்கள் என்றால் இந்த தலைமுறைகளில் இருந்து தமிழில் பேசியக்கூடியவர்களிடம் இந்தியை கட்டாயப்படுத்தி கற்பிப்பதன் மூலம் ஒரு 25 ஆண்டுகளுக்கு பின்னால் 50 ஆண்டுகளுக்கு பின்னால் தமிழ்நாட்டைச் சார்ந்த அனைவர்களுமே இந்தியை பேசவும், கற்கவும் எழுதவும் வளர்ந்து விடுவார்கள். இந்த மக்களை ஏய்ப்பது அவர்களுக்கு மிகவும் எளிது. ஏமாற்றுவதற்கு, வீழ்த்துவதற்கு, அடிமைப்படுத்துவதற்கு, ஆளுமை செய்வதற்கு, ஆதிக்கம் செய்வதற்கு மிக எளிது.

1965-ல் இருந்து எதிர்ப்பு போராட்டம் நடக்காமல் இருந்திருந்தால் நாம் எல்லோரும் இப்போது இந்தி பேசக் கூடியவர்களாக மாறியிருப்போம். நாம் எல்லோரும் இந்தி பேசக் கூடியவர்களாக ஆகியிருந்தால் மோடியின் அரசியல் இங்கே எடுபட்டிருக்கும். தமிழ்நாட்டிலும் அவர்கள் எளிதாக காலூன்றி இருப்பார்கள். தமிழ்நாட்டில் இன்றைக்கும் மோடி வித்தை எடுபடாமல் இருப்பதற்கு காரணம் 1965-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் தான். அந்த போராட்டத்திலே உயிர் துறந்த மொழி போராளிகளின் தியாகம்தான் காரணம்.
மோடி ப்ராம்டரை பார்த்து படிக்கிறார். அதில் இந்தியில் எழுதப்பட்ட பாரதியார் கவிதைகள், திருக்குறளை படிக்கிறார் மோடி. அவர் தமிழில் வணக்கம் சொன்னால் இங்கே இருக்கிற தமிழர்கள் அவருக்கு ஓட்டுப்போட்டு விடுவார்களாம்'' என இந்தியை எதிர்த்து கடுமையாக விமர்சித்து வருகிறார் திருமாவளவன்.

இந்நிலையில், திருமாவளவன் சென்னை வேளச்சேரி பகுதியில் ப்ளூ ஸ்டால் சிபிஎஸ்இ பள்ளியை நடத்தி வருவதாக ஆதாரத்துடன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பதிவில், ''திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், அண்ணன் திரு. திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் ப்ளூ ஸ்டார் செகண்டரி ஸ்கூல் என்ற பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர், அண்ணன் திரு. திருமாவளவன் தான். அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக நடிகர் விஜய் மத்திய அரசின் மும்மொழிக்கொள்கைக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். ஆனால் அவரும் விஜய் வித்யாஸ்ரம் பள்ளியை நடத்தி வருவதாகவும் அங்கு ஹிந்தி மொழி பயிற்றுவித்துருவதாகவும் ஆதரங்களுடன் பதிவிட்டு இருந்தார் அண்ணாமலை.