பிரான்ஸ் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திக்கிறார். இருவரும் ஏஐ உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளனர். பிறகு மார்செய்லே நகரத்திற்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தூதரகத்தை திறந்து வைக்க உள்ளார். அதன்பின்னர், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் பங்கேற்று உயிர்த்தியாகம் புரிந்த இந்தியர்களுக்காக பிரான்சின் மஜார்குவெஸ் நகரில் கட்டப்பட்டுள்ள போர்நினைவுச்சின்னற்கு சென்று பிரதமர் மோடி அஞ்சலி செலுத்த உள்ளார்.
இதனிடையே இந்தியா - பிரான்ஸ் இடையே ராணுவத் தளவாடங்களை கொள்முதல் செய்வது தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாம். குறிப்பாக இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் நிலைநிறுத்தி பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒற்றை இருக்கைக் கொண்ட 22 போர் விமானங்களும் 2 இருக்கை கொண்ட 4 பயிற்சி விமானங்களும் என மொத்தம் 26 விமானங்களை கொள்முதல் செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாம். இவற்றின் மதிப்பு 63 ஆயிரம் கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு இவை நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

அதேபோன்று 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான மற்றொரு ஒப்பந்தமும் கையெழுத்தாக திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்கார்பெனே ரக 3 நீர்மூழ்கி கப்பல்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். பிரான்ஸ், அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இந்தியா திரும்பியதும், அமைச்சரவையைக் கூட்டி இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. ஏனெனில் நீர்மூழ்கி கப்பல்களுக்கு மசாகான் கட்டுமான நிறுவனம் கூடுதல் விலை நிர்ணயம் செய்துள்ளதாகவும், நடப்பு நிதியாண்டு அதாவது மார்ச் 31-க்குள் உரிய விலை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு ஒப்பந்தம் இறுதியாகும் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 3 நாள் பயணமாக பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி... ஏஐ உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்...
ரபேல் போர் விமானங்களைப் பொறுத்தவரை இந்தியா - பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான நாளில் இருந்து 37 முதல் 65 மாதங்களுக்குள் விமானங்கள் இந்தியா வசம் ஒப்படைக்கப்படும். அதாவது 2031-க்குள் அவை இந்திய விமானப்படையில் இணைந்திருக்கும். 2016-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஏற்கனவே 36 ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமல்லாது பிரான்சின் போர் ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் சப்ரான் நிறுவனமும், இந்தியாவின் டிஆர்டிஓ அமைப்பும் இணைந்து 110 கிலோநியூட்டன் ஜெட் ரக ஹெலிகாப்டர்களை தயாரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையும் விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ் பயணம், வெறுமனே செயற்கை நுண்ணறிவு மாநாடு என்பது மட்டுமல்லாமல், இந்திய ராணுவத்தை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: மகா கும்பமேளாவில் நாளை புனித நீராடும் பிரதமர் நரேந்திர மோடி...