தர்மபுரி மாவட்டம், ஏமனூர் வனப்பகுதியில் தந்தத்துக்காக யானையை சுட்டுக் கொன்ற செந்தில் என்பவர் கைது செய்யப்ட்டார். கொல்லப்பட்ட யானையில் இருந்த 2 தந்தங்களை வெட்டி எடுத்துக் கொண்டு தப்பித்த செந்தில், விஜயகுமார், துணையான இருந்த செந்தில் தந்தை கோவிந்தராஜ், தந்தத்தை வாங்க முயற்சித்த தினேஷ் ஆகிய 4 பேரை போலீஸ் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.
மார்ச் 18ம் தேதி கள விசாரணைக்காக அவர்கள் யானை சுட்டப்பட்ட பகுதிக்கு நேரடியாக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது செந்தில் கைவிலங்குடன் தப்பிச் சென்றார். இதையடுத்து, அவரை தமிழகம் மற்றும் கர்நாடக வனத்துறையினர் தொடர்ந்து தேடி வந்தனர்.

மார்ச் 18ம் தேதி தப்பிய செந்தில் ஏப்ரல் 4ம் தேதி பென்னாகரம் வனப்பகுதியில் சடலமாக கிடந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். அப்போது அவரது கைகளில் விலங்கு இல்லை. அவரது மார்புக்கு மேல்பகுதியில துப்பாக்கிக்குண்டு பாய்ந்துள்ளது. அவரின் உடல் மீது நாட்டுத்துப்பாகி கிடந்தது. இந்த நிலையில் செந்தில் மரணத்தில் வனத்துறையினர் மீது சந்தேகம் இருப்பதாக செந்தில் மனைவி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். இதையடுத்து செந்தில் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.
அதற்கான உத்தரவை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பிறப்பித்தார். இந்த நிலையில் பென்னாகரம் இளைஞர் வனத்துறையால் கொல்லப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணை போதாது: சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: தமிழ் படித்தவர்களுக்கு வேலை இல்லையா? தமிழுக்கு இழைக்கப்படும் அநீதி.. அரசுக்கு ராமதாஸ் கேள்வி..!

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது; தருமபுரி மாவட்ட வனத்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அம்மாவட்டத்தில் கொங்காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் செந்தில் என்பவர் காட்டிலிருந்து பிணமாக கண்டெடுக்கப்பட்டது குறித்த வழக்கின் விசாரணைக்கு தருமபுரி மாவட்ட காவல்துறை விசாரணையிலிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக காவல்துறை ஆணையிட்டிருக்கிறது. இது போதுமானதல்ல.

யானை கொல்லப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணைக்காக மார்ச் 17-ஆம் தேதி வனத்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட செந்தில், அதன்பின் 17 நாட்கள் கழித்து தான் காட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில், வனத்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட செந்திலைக் காணவில்லை; அவரை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று அவரது மனைவி சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனு மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படிப்பட்ட காவல்துறையின் அங்கமான சிபிசிஐடி, அதன் சகோதர அமைப்பான வனத்துறை மீதான குற்றச்சாட்டு குறித்து நியாயமான விசாரணை நடத்தும் என்ற நம்பிக்கை இல்லை.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செந்தில் கொடுமைப்படுத்தி தான் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற நம்புவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. மாநில அரசின் விசாரணை அமைப்புகள் மீதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் போது, அதை அந்த அமைப்புகளே விசாரித்தால் நீதி கிடைக்காது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதியை பெற்றுத் தர வேண்டியது தமிழக அரசின் கடமை.
அதனால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதை கவுரவப் பிரச்சினையாக தமிழக அரசு எடுத்துக் கொள்ளக்கூடாது. எனவே. தருமபுரி மாவட்ட வனத்துறையினரின் விசாரணையில் இருந்த பென்னாகரம் இளைஞர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். இளைஞரின் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரண நிதியையும் தமிழக அரசு வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றுக.. தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை..!