சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய மாவோயிஸ்ட்களுக்கு எதிரான வேட்டையில் 16 மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் இருவர் படுகாயமடைந்தனர்.
2026ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மாவோஸிட்கள் இருக்கமாட்டார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் மாவோயிஸ்ட்கள் வேட்டையை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “சுக்மா மாவட்டத்தின் கேரளல்பால் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மாவோயிஸ்ட்கள் முகாமிட்டுள்ளதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட ரிசர்வ் படையினர், போலீஸார், மாவோயிஸ்ட் எதிர்ப்பு மத்திய ரிசர்வ் படை ஆகியோருடன் சேர்ந்து இன்று காலை 8 மணி அளவில் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தோம்.
இதையும் படிங்க: ரூ.20 ஆயிரம் கோடி ஊழல்… சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் வீடுகளில் சிபிஐ சோதனை..!

அப்போது பாதுகாப்புப்படையினரை நோக்கி மாவோயிஸ்ட்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர், பாதுகாப்புப் படையினர், ரிசர்வ் படையினரும் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே கடுமையாக நடந்த துப்பாக்கிச் சண்டையில் 16 மாவோயிஸ்ட்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர், பாதுகாப்புப்படையினர் 2 பேர் காயமடைந்தனர். இந்த வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்கள் உடல்நிலையும் சீராக இருக்கிறது.

மாவோயிஸ்ட்களிடம் இருந்து ஏ.கே.47 ரக தானியங்கி துப்பாக்கி, எஸ்எல்ஆர் துப்பாக்கி, இன்சாஸ் ரைபிள், 303 ரைபிள், ராக்கெட் லாஞ்சர், பிஜிஎல் லாஞ்சர், வெடிமருந்துகள், துப்பாக்கி குண்டுகள், கையெறி குண்டுகள், ஆகியவை கைப்பற்றப்பட்டன” எனத் தெரிவித்தார்.
கடந்த 10 நாட்களுக்குள் நடந்த 2வது என்கவுன்ட்டர் இதுவாகும். கடந்த 20ம் தேதி பிஜபூர்-தாந்தேவாடா மண்டலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 26 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை 116 மாவோயிஸ்ட்கள் 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பாஸ்தர் மண்டலத்தில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் என்கவுன்ட்டர்.. 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை.. தொடரும் துப்பாக்கிச் சண்டை..!