பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்தி வரும் போராட்டம் ஆயிரம் நாட்களை எட்டியுள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதனை எதிர்த்துத் தொடர்ந்து 1000ஆவது நாளினை எட்டியுள்ள பரந்தூர் - ஏகனாபுரம் கிராமப் பொதுமக்களின் போராட்டத்தினைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு உடனடியாக இத்திட்டத்தினை கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

1000 நாட்கள் கடந்தும் மக்கள் போராடி வரும் நிலையில் ஒருமுறை கூட அவர்களை நேரில் சென்று சந்திக்காத ஆட்சியாளர்களின் செயல்பாடு, மக்களைப் பற்றித் துளியும் அக்கறை கொள்ளாத வெறுக்கத்தக்க ஆட்சியின் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அனைத்துவித சூழலியல் அழிவுத் திட்டங்களையும் எதிர்ப்பது போல மக்களை ஏமாற்றி, எட்டுவழிச் சாலை போன்ற திட்டங்களை எதிர்த்துப் பொதுமக்கள் போராடிக் கண்ட வெற்றியின் பலன்களைத் தன்வசப்படுத்தி, ஆட்சி அதிகாரத்தை அடைந்த திமுக அரசானது அதற்கு ஈடான அழிவுத் திட்டங்களைத் தாமே முன்னெடுத்து மக்களின் குரல்களை நசுக்கி வாழ்வாதாரங்களை சிதைத்து, செயல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது மக்களுக்கு இழைக்கும் பச்சைத் துரோகம் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கட்டிடத்துக்கு வெள்ளை அடிப்பவன் அல்ல; கட்டிடத்தையே இடித்து கட்டுகிறவன்... சீமான் ஆவேசம்!!

இத்திட்டத்தை அமைக்கும் நிலைப்பாடெல்லாம் ஒருபுறம் இருக்க, தொடர்ச்சியாகப் போராடி வரும் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றைக் கருத்தில் கொண்டாவது செயல்பட வேண்டும் என்கின்ற அடிப்படை மக்களாட்சி மாண்பைக் கூடக் கடைப்பிடிக்காமல், போராடிவரும் பொதுமக்களின் மீது அதிகாரப் போக்கினைக் கட்டவிழ்த்துக் காவல்துறையின் அடக்குமுறையை ஏவி, பாஜக அரசுக்கு எவ்விதத்திலும் சளைக்காத எதேச்சதிகாரப் போக்கினைத் திமுக அரசு முழுமையாகக் கையில் எடுத்துள்ளது. பாஜக அரசினைப் பார்த்துத் திமுக வைக்கக்கூடிய அத்தனை பாசிச முழக்கங்களும் திமுக அரசுக்கும் பொருந்தும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதை எதிர்த்துவரும் பொதுமக்களின் தொடர் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, இதுநாள் வரை பொதுமக்களுக்குத் துணையாகப் போராட்டத்தில் பங்கெடுத்த நாம் தமிழர் கட்சி, தொடர்ந்து இறுதிவரை மக்கள் போராட்டத்திற்கான ஆதரவினை அனைத்துத் தளங்களிலும் அளித்து, துணைநின்று போராடும் என கூறியுள்ளார். மேலும், மக்களின் இந்தப் போராட்ட உணர்வே பாசிச ஆட்சியாளர்களுக்கு முடிவுரை எழுதட்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சாட்டை துரைமுருகனின் யூடியூப் சேனல்... இதுதான் பிரச்சினை... உடைத்துப்பேசிய சீமான்..!