உலகமே உற்று நோக்கிய... அனைவரின் பிரார்த்தனைகளும் ஒன்றிணைந்த அந்த நொடி தான் சுனிதா வில்லியம்ஸ் பூமியில் கால் பதித்த தருணம். பல சிக்கல்களை , பல நெருக்கடிகளை தாண்டி வெற்றிகரமாக தனது விண்வெளி பயணத்தை முடித்து சொந்த பூமிப்பந்தில் கால் பதித்து உள்ளனர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்.

8 நாட்கள் என நினைத்துச் சென்ற பயணம் 9 மாதங்களை தொட்டது. பூமிக்கு திரும்பி வருவோமா?தாங்கள் மீட்கப்படுவோமா? இயற்கை வழி தருமா? தங்கள் குடும்பத்தினரை காண்போமா என எத்தனை எத்தனை கேள்விகள் மனதில் எழுந்திருக்கும்! அத்தனைக்கும் விடையாய் அமைந்தது இன்றைய நாள்.அந்த பொற் தருணத்தை உலகமே எதிர்பார்த்து காத்திருந்தது.
இதையும் படிங்க: பூமிக்கு வரும் சுனிதா வில்லியம்ஸ் எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்னென்ன... மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்..!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 286 நாட்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் பூமிக்குத் திரும்பி உள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 1998-ம் ஆண்டு நவம்பரில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்தன. இது, பூமியில் இருந்து சுமார் 460 கி.மீ. தொலைவில் உள்ளது. மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் பூமியை சுற்றி வருகிறது.109 மீட்டர் நீளம், 73 மீட்டர் அகலம், 45 மீட்டர் உயரம், 450 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தில் 7 பேர் அடங்கிய குழு தங்கியிருந்து ஆய்வு செய்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஜூன் 5-ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்ற இருவரும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டு விண்வெளி நிலையத்திலேயே மாதக்கணக்கில் தங்க நேரிட்டது.9 மாதங்கள் அங்கேயே சிக்கி இருந்த இருவரையும் மீட்க ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ டிராகன் 9 என்ற விண்கலம் கடந்த சனிக்கிழமை புறப்பட்டது.

அமெரிக்காவின் புளாரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட டிராகன் விண்கலம் ஞாயிற்றுக் கிழமை ஐஎஸ்எஸ் நிலையத்தில் வெற்றிகரமாக இணைந்தது. பூமியில் இருந்து புதிதாக வந்த 4 விண்வெளி வீரர்களை, ஐஎஸ்எஸ் நிலையத்தில் தங்கியிருக்கும் சுனிதா உள்ளிட்ட 7 வீரர்களும் ஆரத் தழுவி வரவேற்றனர். பின்னர் புதிய வீரர்களிடம் பணிகளை ஒப்படைத்துவிட்டு 4 வீரர்கள், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பினர்.

அந்த விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், பூட்ச் வில்மோர் மற்றும் நிக் ஹேக், அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் பூமிக்கு புறப்பட்டனர். முன்னதாக விண்வெளி நிலையத்தில் அங்கிருந்த வீரர்களிடம் இருந்து சுனிதா உள்ளிட்டோர் கட்டி அணைத்து பிரியா விடை கொடுத்தனர்.சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, பூமியை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் 9 விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் பூமியை நோக்கி பயணத்தை தொடங்கினர்.இந்த விண்கலம் இன்று அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் ஃப்ளோரிடாவின் உள்ள கடல் பகுதியில் கரையிறங்கும் என்று கணிக்கப்பட்டது.

17 மணி நேர பயணத்தை முடித்துக்கொண்டு விண்கலம் இந்திய நேரப்படி இன்று(மார்ச் 19) அதிகாலை 3.30 மணியளவில் பூமியில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக நாசா தெரிவித்துள்ளது. டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸுடன் சேர்த்து பட்ச் வில்மோர், நிக் ஹேக், அலெக்சாண்டர் கார்புனோவ் ஆகிய 4 வீரர்களும் பூமிக்கு பத்திரமாகத் திரும்பியுள்ளனர்.

விண்கலம் கடலில் விழுந்ததும், மீட்பு படையினர் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு ஆய்வு செய்தனர். பின்னர், அந்த விண்கலத்தை மீட்பு கப்பலில் ஏற்றி வைத்து, சுத்தம் செய்தனர். பின்னர் ஒவ்வொரு விண்வெளி வீரர்களாக மீட்டனர். குறிப்பாக சுனிதா வில்லியம்ஸ் சிரித்த முகத்துடன் கைகளை அசைத்தவாறு விண்கலத்தில் இருந்து வெளியில் வந்தார்.இந்த நிமிடங்களுக்கு தானே உலகமே காத்திருந்தது. இறுதி நேரத்தில் எந்த விதமான அசம்பாவிதங்களும் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு தரப்பு மக்களும் பிரார்த்தனை செய்தனர். சுனிதா வில்லியம்ஸ் பூர்வீக கிராமமான ஜூலாசன் வாழ் மக்களும் பத்திரமாக விண்வெளி வீரர்கள் பூமி திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் விண்வெளி வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிகழ்வு எலான் மஸ்கின் சாதனைகளில் மிகப்பெரிய மைல்கல்லாக தான் பார்க்கப்படுகிறது. இம்முறை 9 மாதங்கள் விண்வெளியில் தங்கிய சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் நீண்ட காலம் தங்கிய முதல் பெண்மணி என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஆவலுடன் காத்திருக்கிறோம் சுனிதா.. பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. நெகிழ்ச்சியாக கடிதம் எழுதிய மோடி..!