மதுரை - மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூர் பகுதி மக்கள் 2 மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தினர். திட்டத்தை கைவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசியல் கட்சியினரும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு போராட்டக்குழு நிர்வாகிகள் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது, மேலூர் பகுதியில் நன்றி தெரிவிக்கும் விழாவில் பங்கேற்க அவர்கள் அழைப்பு விடுத்தனர். அதை ஏற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை அரிட்டாபட்டி, அ.வள்ளாலப்பட்டியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டங்களில் பங்கேற்றார்.
அ.வள்ளாலப்பட்டியில் மக்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "மத்திய பாஜக அரசு டங்ஸ்டன் திட்டத்தை கொண்டுவர முயற்சித்தது. மத்திய அரசு என்னனென்ன கொடுமைகள், அக்கிரமங்கள், மக்கள் விரோத செயல்களை செய்கிறது என்பது உங்களுக்கு தெரியும். பல்வேறு மாநிலங்களிலிருந்து விவசாயிகள் தலைநகர் டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். ஏற்கனவே டெல்லியில் விவசாயிகள் குளிரிலும், வெயிலிலும் 2 ஆண்டுகளாக போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தின் போது நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர். டங்ஸ்டன் திட்டப் போராட்டத்தில் 3 மாதங்களில் வெற்றி கிடைத்துள்ளது. மத்திய அரசு பணிந்து திட்டத்தை ரத்து செய்துள்ளது. இதற்கு மக்களான நீங்களும், தமிழக அரசும் கொடுத்த கடுமையான எதிர்ப்புதான் காரணம். இது மாபெரும் வெற்றி.

மாநில அரசின் அனுமதியில்லாமல் முக்கிய கனிம வளங்களை மத்திய அரசு ஏலம் விடலாம் என நாடாளுமன்றத்தில் பாஜக அரசு கொண்டு வந்த சட்டம்தான் இதற்குக் காரணம். இச்சட்டம் கொண்டு வரப்பட்டபோது திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆனால், அதிமுக எதிர்க்கவில்லை. மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பித்துரை, சட்டத்தை ஆதரித்தும், வரவேற்றும் பேசினார். இதுவே டங்ஸ்டன் திட்டத்துக்கு தொடக்கப்புள்ளியாக இருந்தது.
இதையடுத்து டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு 2 முறை கடிதம் எழுதினேன். அதை அரசியல் காரணங்களுக்காக சிலர் மறைக்கப் பார்க்கின்றனர். தமிழக அரசு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்தது வந்தது. இதை திட்டமிட்டு மறைக்கப் பார்க்கின்றனர். இந்த எதிர்ப்பையும் மீறி ஏலம் விட மத்திய அரசு முயன்றது. இதனால் தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அரிட்டாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியபோது, அக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பி.மூர்த்தி, திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் அனுமதி தரமாட்டார், நிச்சயமாக தமிழக அரசு தடுத்து நிறுத்தும் என உறுதியாக தெரிவித்தார்.
அடுத்து மேலூரில் வணிகர்கள், மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது அங்கும் அமைச்சர் பி.மூர்த்தி நேரில் வந்து, டங்ஸ்டன் திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என தெளிவாக கூறினார். அன்றே திட்டத்தை ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு அவசர கடிதம் எழுதினேன். அன்று மாலையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.. பெருமையில் துள்ளிக் குதிக்கும் அண்ணாமலை!

இதில் சிலர் குறுக்குசால் ஓட்ட நினைத்தார்கள். அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. இதை அரசியல் பிரச்சினையாக கருதவில்லை. நான் இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டம் வராது, தமிழக அரசு அனுமதி அளித்தால்தான் திட்டம் வரும். அதையும் மீறி திட்டததை கொண்டு வந்தால் நான் முதல்வராக இருக்கமாட்டேன். இதுதான் முடிவு என என அழுத்தம் திருத்தமாக கூறினேன். திட்டம் நிறைவேறும் சூழல் வந்தால் முதல்வராக இருக்கமாட்டேன் என ஏன் சொன்னீர்கள் என அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என்னிடம் கேட்டனர். அதற்கு பதவியை பற்றி நான் கவலைப்படவில்லை. மக்கள் பிரச்சினைதான் எனக்கு பெரிது என தெளிவாக கூறினேன்.
சட்டப்பேரவைத் தீர்மானம், மக்களின் போராட்டம் காரணமாக திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த நேரத்தில் சட்டப் பேரவையில் தீர்மானத்தை ஆதரித்த அனைத்துக் கட்சிகளுக்கும் உங்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சிப் பொறுப்பேற்ற போது, இது உங்களின் அரசு, உங்களில் ஒருவனாக இருந்து கடமைகளை நிறைவேற்றுவேன் என தெளிவாக கூறினேன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று கூறி பதவியேற்றேன். அவர் வழியில் நின்று ஆட்சி செய்து வருகிறேன். இந்த ஆட்சி எங்களுக்கானது அல்ல. உங்களுக்கானது” என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

அரிட்டாபட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய மக்கள் எப்படிப்பட்ட அழுத்தம் கொடுத்தனர் என்பது நன்கு தெரியும். இதை உணர்ந்த உங்களால் உருவாக்கப்பட்ட திராவிட மாடல் ஆட்சியும் உரிய நடவடிக்கை எடுத்தது. திட்டத்தை ரத்து செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் பேசினர். தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் தற்போது நினைத்தபடி வெற்றி கிடைத்துள்ளது. எப்போதும் உங்களுக்கு துணை நிற்போம் என உறுதியளிக்கிறேன்.
இப்போது என்னால் நீண்டநேம் பேச முடியாது. அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். மீண்டும் உங்களை சந்திக்க வருவேன்.
ஒன்றரை ஆண்டில் தேர்தல் வரப்போகுது. அது உங்களுக்கு தெரியும். அந்த நேரத்தில் மக்கள் என்ன முடிவோடு இருக்கிறார்கள் என்பது எனக்கும் தெரியும். எது எப்படியிருந்தாலும் உங்களுக்காக நாங்கள், எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். இது பெரியார் வழியில் அண்ணா, கலைஞரால் உருவாக்கப்பட்ட ஆட்சி. உங்கள் வீட்டுப்பிள்ளை, உங்களால் ஒருவனாக இருக்கும் ஸ்டாலின் ஆட்சி. என்றைக்கும் ஆதரவு தாருங்கள். உங்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருப்போம்” என்று மு.க.ஸ்டாலின் பேசினார்
இதையும் படிங்க: டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து - மத்திய அரசு அறிவிப்பு