உலகம் முழுவதும் போதை வஸ்துகள் மனிதருக்கு தரும் பேரழிவைப்போல், சூதாட்டங்களும் மனிதர்களின் வாழ்வை அழித்தே வருகின்றன. இதிகாசங்களில் இருந்தே சூதாட்டம் விளையாடும் பழக்கம் காணப்பட்டாலும், தற்போது அது பல வடிவங்களை எடுத்துள்ளது. சீட்டு விளையாடுவது, குதிரை பந்தயம், லாட்டரி சீட்டுகள் விற்பனை, 3 நம்பர் என அதன் வடிவங்கள் எத்தனை விதமாக மாறினாலும் அனைத்திலும், சராசரி ஏழை மக்களின் கனவை, ஆசையை பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கையை சிதைக்கும் தன்மை மட்டும் மேலோங்கி காணப்படுகிறது. இதன் காரணமாகவே தமிழக அரசு, சீட்டு விளையாடுவது, குதிரை பந்தயம், லாட்டரி சீட்டுகள் விற்பனை, 3 நம்பர் போன்ற சூதாட்டங்களை தமிழகத்தில் தடை செய்துள்ளது.

அண்டை மாநிலமாக கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வந்த போதிலும், தமிழகத்தில் அதற்கான தடை தற்போது வரை நீடிக்கிறது. அதே போல் சீட்டு விளையாட்டிலும் ஏராளமான பணத்தை இழக்கும் மக்கள், தற்கொலை செய்வதும் வாடிக்கையான பின் அதனையும் நமது தமிழக அரசு தடை செய்துள்ளது. ஆனால் அங்கொன்றும், இங்கொன்றுமாக திரைமறைவில் அரசுக்கு தெரியாமல், சீட்டு விளையாட்டு தொடர்கிறது. சிலர் ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழக்கின்றனர். இதனால் விரக்தி அடைந்து காவலர்கள் உட்பட பலர் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கிறது. இதன் காரணமாகவே ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்நிலையில் திருப்பூரில் சீட்டு விளையாடி லட்ச ரூபாய் பணத்தை இழந்த ஒருவர், தன்னை போல யாரும் ஏமாறக்கூடாது என்பதை எச்சரிப்பதர்காக பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பாதியில் மாட்டிய பைக் திருடன்.. விரட்டிப்பிடித்து வெளுத்த பொதுமக்கள்.. பரபரப்பு சிசிடிவி காட்சி..!

திருப்பூர் மாவட்டம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தம்பதிகள் இருவரும் அருகிலுள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே கோபாலகிருஷ்ணன் சரியாக வேலைக்குச் செல்லாமல் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. சம்பாதிக்கும் பணத்தில் தனியார் கிளப்புகளில் சீட்டு விளையாடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் வீட்டிற்கு முறையாக பணம் தராமல் இருந்துள்ளார். சமீபத்தில் ஊத்துக்குளி பகுதியில் உள்ள தனியார் கிளப்பில் சீட்டு விளையாட சென்றுள்ளார் கோபாலகிருஷ்ணன். அங்கு விளையாட்டின் ஆர்வத்திலும், விட்டதை பிடிக்க வேண்டும் என ஆசையிலும் தொடர்ந்து சீட்டு விளையாடி ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் பணத்தை இழந்துள்ளார்.

குடும்ப செலவுக்காக இத்தனை காலம் சேமித்து வைத்திருந்த அனைத்தையும் இழந்த விரக்தி அடைந்துள்ளார் கோபாலகிருஷ்ணன். கடன் வழங்கியவர்கள் தொடர்ந்து பணம் கேட்டு நச்சரிக்கவே, பணத்தை திரும்ப தர முடியாமல் தவித்துள்ளார். தனது இந்த நிலைக்கு சீட்டு விளையாடியது தான் காரணம் என்று உணர்ந்த கோபாலகிருஷ்ணன், நேராக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். கையோடு தான் கேனில் கொண்டு வந்து இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்துள்ளார். இதனைப் பார்த்த ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்து பெட்ரோல் கேனை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினார்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தான் சீட்டு விளையாடி பணத்தை இழந்துவிட்டதாகவும் தன்னைப்போல் யாரும் சீட்டு விளையாடி பணத்தை இழந்து விடக்கூடாது என்பதை எச்சரிப்பதற்காகவே தீக்குளிக்க வந்ததாகவும் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சீட்டு விளையாட்டில் பணத்தை இழந்தது மட்டுமல்லாமல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ரூ.15,000 ஆட்டைய போட்டாங்க..! அலறும் மிர்ச்சி செந்தில்.. தெறிக்கும் சைபர் மோசடி..!