திமுக கூட்டணி 200 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தமிழக சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "2026-ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் இருக்காது. தமிழக அரசு மீது எந்தக் கருத்தையும் மத்திய அரசு திணிக்கக் கூடாது. கல்வி, சுகாதாரம் போன்றவை பொதுப் பட்டியலில் இருக்கின்றன. அதனால், அதுதொடர்பாக முடிவு எடுக்கும்போது மாநில அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று முதல்வர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடுவதை அனுமதிக்க முடியாது என்றும் 142-ஆவது சட்டப் பிரிவு ஜனநாயக சக்திக்கு எதிரானது என்று குடியரசு துணைத் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். 142ஆவது சட்டப் பிரிவைப் பயன்படுத்தி வக்பு திருத்தச் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த பிறகே அக்கருத்தை அவர் தெரிவித்துள்ளார். அதன் மூலம் பாஜக தனது கருத்தை வெளியிட்டுள்ளது. அவரது கருத்து, உச்ச நீதிமன்றத்தை எச்சரிக்கும் விதத்தில் உள்ளது.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாதா.? ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சொல்வது என்ன?
ஆளுநரை கேள்வி கேட்கக் கூடாது. குடியரசுத் தலைவரை கேள்வி கேட்கக் கூடாது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ள சட்டத்தை விமர்சிக்கிற உரிமை நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதற்குள் திமுக அரசு மீது அவதூறான பிரசாரத்தை அதிமுக செய்து வருகிறது.

மூன்று மாதங்களுக்கு முன்பு பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். ஆனால், தற்போது வார்த்தைகளை மாற்றி பேசுகிறார். திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும்" என்று எஸ். ரகுபதி தெரிவித்தார்.
இதையும் படிங்க: வக்பு சட்ட விவகாரம்: உச்சநீதிமன்றம் தடை விதிக்க நாங்க தான் காரணம்.. விஜய் விளக்கம்!!