சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் திருவேணி சங்கமம், பகவதி அம்மன் திருக்கோயில், காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சூரியன் உதயமாகும் காட்சி, சூரியன் மறையும் காட்சி ஆகியவை மிகவும் பிரபலமானது.

இவற்றை காணவும், கன்னியாகுமரி கடலின் நடுவே உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே அமைக்கப்பட்டு உள்ள கண்ணாடி இழை பாலத்தை காணவும் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் என அதிக அளவில் வருகை புரிகின்றனர்.
இதையும் படிங்க: தொடர் விடுமுறை எதிரொலி.. 3 லட்சத்துக்கும் அதிகமானோர் அரசு பேருந்துகளில் பயணம்.. போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

குறிப்பாக, திருவள்ளுவர் சிலை மற்றும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டப பாறையை இணைத்து ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்திற்கு கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த கண்ணாடி பாலத்தில் நடப்பது ஒரு புதுவித அனுபவத்தைத் தருவதால், சுற்றுலாப் பயணிகள் இடையே ஆர்வமும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், பால கட்டுமானத்தின் பராமரிப்புப் பணியை மத்திய பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ், அண்ணா பல்கலைக்கழகம் போன்றவை ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் ஆய்வு செய்ய உள்ளன.

ஆகையால், இந்த ஆய்வு நடைபெறும் 5 நாட்களும் கண்ணாடி இழை பாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. எனவே கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இதனைக் கருத்தில் கொண்டு தங்களுடைய பயணத் திட்டத்தை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: 2026இல் துணை முதல்வரா.? பதறிபோய் செல்வபெருந்தகை எடுத்த அதிரடி ஆக்ஷன்.!