அண்ணா யூனிவர்சிடி மாணவியை நேரில் சந்தித்து நிதியுதவி வழங்க நினைத்தார் விஜய். ஆனால் மாணவியை சந்திக்க முடியாது என்பதால் வேறு வகையில் உதாவ முடியுமா என முயன்று வருவதாக தவெக தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நான்கு நாட்களுக்கு முன் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நபர் அழைக்கும் போது வரவேண்டும் என கூலாக அங்கிருந்து வெளியேற பாதிக்கப்பட்ட மாணவி காவல்துறையில் புகார் அளிக்க சென்னை, கோட்டூரை சேர்ந்த ஞான சேகரன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தது ஞானசேகரன் என்பது உறுதியானது. இந்த விவகாரம் பெரிதாக வெடித்து கிளம்பியது. உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை கையில் எடுத்தது. அதிமுக சார்பில் சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தது.
மூன்று பெண் எஸ்.பிக்கள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்க உத்தரவிட்டு, மாணவிக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்கவும், மாணவிக்கு கவுன்சிலிங் மற்றும் இலவச கல்வி வழங்கவும் உத்தரவிட்டது. காவல் ஆணையர் அருண் மீது தேவைப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், எஃப்.ஐ.ஆர் பதிவிறக்கம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
இதனிடையே இந்த விவகாரத்தில் ஆளும்கட்சி கூட்டணி கட்சியான சி.பி.எம்மின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ போராட்டம் நடத்தியது. அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்து சாட்டையடி போராட்டமும் நடத்தினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி சி.பி.ஐ.விசாரணை கோரினார். 'யார் அந்த சார்' போஸ்டர் தமிழகம்.முழுவதும் ஒட்டப்பட்டது.

இதனிடையே லேசான கண்டன அறிக்கையுடன் தவெக தன் எதிர்ப்பை நிறுத்திக்கொண்டதை அவர்களது தொண்டர்களே ஏற்கவில்லை. விஜய் வர முடியாவிட்டாலும் போராட்டம் நடத்தவாவது அனுமதி அளிக்க வேண்டும் புஸ்ஸி ஆனந்த் போன்ற தலைவர்கள் கலந்துக்கொண்டு கண்டனம் தெரிவிக்க வேண்டும், இதுபோன்ற விவகாரங்களில் அறிக்கை மட்டும் போதாது என்கிற முணுமுணுப்புகள் எழுந்தன.
இந்த விவகாரம் தவெகவுக்குள் வெடித்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஏதாவது ஒரு வகையில் நிதி உதவி போன்று வழங்கி பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என விஜய் விரும்பியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் மிகவும் வருத்தப்பட்ட விஜய் மாணவிக்கு ஆறுதல் தெரிவிக்க விரும்புவதாக தெரிவித்த நிலையில் நிர்வாகிகள் அவரது முகவரியை கேட்க இதைக்கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
மாணவியை சந்திப்பதோ, அவரது குடும்பத்தாரை சந்திப்பதோ உடனடியாக ஊடக வெளிச்சத்திற்கு வந்துவிடும். எந்த வகையிலும் மாணவியின் அடையாளம் வெளியில் வந்துவிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு. உதவி செய்யப்போய் உபத்திரவம் இரு பக்கமும் வந்துவிடும். ஆகவே அந்த முயற்சியை கைவிடுங்கள் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாம்.
வேண்டுமானால் மாணவிக்கு நிதி உதவி செய்ய விரும்பினால் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு அண்ணா பல்கலைக்கழக பதிவாளரிடம் காசோலையை ஒப்படைக்கலாம் என யோசனை கூறப்பட்டுள்ளதாகம் அதை தவெக தலைவர் விஜய் தரப்பு பரிசீலித்து வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.