வக்ஃபு வாரியத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள வக்ஃபு வாரியங்களுக்கு இருக்கும் சொத்துக்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
வக்ஃபு வாரியத் திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதை மீறி, வக்ஃபு வாரிய மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தி, அதை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆலோசனைக்கு மத்திய அரசு அனுப்பிவைத்தது. நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை நடத்தி 635 பக்கங்களில் அறிக்கையாக மக்களவை தலைவரிடம் தாக்கல் செய்தது.

இதையடுத்து, திருத்தப்பட்ட வக்ஃபு வாரிய மசோதாவை மத்திய சிறுபான்மைத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த மசோதா மீது 8 மணிநேரம் வரை விவாதம் நடத்த நாடாளுமன்ற அலுவல் குழு ஒப்புதல் அளித்தது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனைத்து எம்.பிக்களும் அவைக்கு இன்று வர வேண்டும் எனக் கோரி கொறடா மூலம் உத்தரவிட்டுள்ளன.
இதையும் படிங்க: வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா.. பாஜக வெளிநடப்பு, அதிமுக ஆதரவு..!
வக்ஃபு என்றால் என்ன?
எளிமையாகக் கூற வேண்டுமென்றால் வக்ஃபு என்பது மதரீதியான நன்கொடை. பெரும்பாலும் முஸ்லிம்களால் சொத்துக்களாக நன்கொடை அளிக்கப்படுவது. இந்த நன்கொடை என்பது முறையான ஆவணங்கள் இன்றி, வாய்மொழியாகவே வக்ஃபுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த நன்கொடைகள் மூலம் மசூதிகளை பராமரித்தல், கல்லறைகளைப் பராமரித்தல், மதரஸாக்களுக்கு நிதி, ஆதரவற்றோருக்கு நிதி ஆகியவை வழங்கப்படுகிறது. வக்ஃபுக்கு சொந்தமான சொத்தை விற்கவோ அல்லது வாங்கவோ முடியாது.
மத்திய அரசின் தகவலின்படி, நாட்டில் வக்ஃபு வாரியங்களின் கட்டுப்பாட்டில் மட்டும் 8.72 லட்சம் சொத்துக்கள் உள்ளன, இதன் மதிப்பு9.40 லட்சம் ஏக்கராகும்.

வக்ஃபு வாரியத்திடம் எவ்வளவு நிலங்கள் உள்ளன?
மத்திய அரசின் புள்ளிவிவரங்கள்படி, வக்ஃபு வாரியத்தின் கட்டுப்பாட்டில் 8.70 லட்சம் சொத்துக்கள் உள்ளன, 9.4 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருக்கலாம். இதன் மதிப்பு ரூ.1.20 லட்சம் கோடியாகும். உலகிலேயே அதிகமான வக்ஃபு வாரியச் சொத்துக்களை வைத்திருக்கும் நாடு இந்தியாதான். அது மட்டுமல்லாமல் ரயில்வே மற்றும் ராணுவத்துக்கு அடுத்தார்போல் இந்தியாவிலேயே மிகப்பெரிய நிலச்சுவான்தாரக, நிலத்துக்கு சொந்தக்காரரும் வக்ஃபு வாரியம்தான்.

வக்ஃபு வாரியத்தின் எத்தனை அசையா, அசையும் சொத்துக்கள் உள்ளன?
மத்திய அரசின் புள்ளிவிவரங்கள்படி, வக்ஃபு வாரியத்திடம் 8 லட்சத்து 72 ஆயிரத்து 328 அசையா சொத்துகள் உள்ளன. 16,713 அசையும் சொத்துக்கள் உள்ளன இவை வக்ஃபு வாரியத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3,56,051 வக்ஃபு எஸ்டேட்கள் வக்ஃபு வாரியத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வக்ஃபு திருத்த மசோதா என்ன தீர்வு காண்கிறது?
வக்ஃபு சட்டம் 1995 சட்டத்தை திருத்தவே வக்ஃபு திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் வக்ஃபு சொத்துக்களை முறைப்படுத்துதல், அதில் இருக்கும் சவால்களை சரி செய்யும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வக்ஃபு வாரிய சொத்துக்களை முறைப்படி பதிவு செய்து, நிர்வாகம் செய்யவும், மேலாண்மை செய்யவும் இந்த மசோதா இடம் அளிக்கிறது.
முந்தைய சட்டத்தில் இருந்த குறைபாடுகளை நீக்கி, மறுபெயரிடுதல், வரையறைகளைப் புதுப்பித்தல், பதிவுமுறையை மேம்படுத்துதல் மற்றும் வக்ஃபு சொத்துகளை நிர்வகிப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கை அதிகரித்தல் போன்ற மாற்றங்களை இந்த மசோதாவில் மத்திய அரசு அறிமுகம் செய்கிறது. வக்ஃபு சொத்துக்களை திறம் பட நிர்வகிக்கவும், தவறான நிர்வாகத்தை தடுத்து, ஊழல்களை தடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றவும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா.. எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்த முதலமைச்சர்..!