தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தனியார் மகளிர் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவியர்கள் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். இதில் நாகூரை சேர்ந்த 19 வயதான மாணவி கல்லூரி வளாகத்திலேயே அமைந்துள்ள விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று மதிய உணவுக்காக விடுதிக்குச் சென்ற மாணவி மீண்டும் வகுப்பிற்கு செல்லாமல் விடுதி அறையிலேயே தங்கி விட்டதாக தெரிகிறது. இதற்கிடையே வகுப்பறையில் இருந்து சக மாணவியர்கள், முற்பகல் வகுப்பிற்கு வந்த விடுதி மாணவி பிற்பகல் வகுப்பிற்கு வராதது குறித்து பேராசிரியர்களிடம் தகவல் அளித்தனர். அதன்பேரில் அவரது விடுதி அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார்.
இதையும் படிங்க: பலமுறை மனு அளித்தும் பரிசீலனை செய்யப்படாததால் ஆத்திரம்.. விபரீத முடிவில் இறங்கிய மாற்றுத்திறனாளி..

இதை கண்டு அதிர்ந்து போன கல்லூரி நிர்வாகத்தினர் மாணவியின் பெற்றோருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் மாணவியின் சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதனை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாணவியின் இளைய சகோதரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.

அவரது தாயும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலமாகியுள்ளார். அதனால் மாணவி தொடர்ந்து மன உளைச்சலில் காணப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் போலீசார் மாணவியின் மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்ற கோணத்திலும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . கும்பகோணத்தில் கல்லூரி மாணவி விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கல்லூரி மாணவியர்களிடையேயும், உறவினர்களிடையேயும் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 3 கடைகளில் அடுத்தடுத்து கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்.. கடுப்பான போலீசார் தீவிர விசாரணை