மதுரையில் பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழக அரசு உரிய பணத்தைக் கேட்டால், அவர்களுடைய கல்வித்திட்டத்தை நமது தலையில் மத்திய அரசு புகுத்துகிறது. அண்ணாமலை போன்றவர்களுக்கு முதலில் வரலாற்றைச் சொல்லித் தர வேண்டும். உலகத்திலேயே மொழிக்காக போராடியது தமிழகம்தான். மொழி விஷயத்தில் கட்சி வேறுபாடு இன்றி சந்திக்க அனைவரும் தயாராக வேண்டும். தமிழக அரசு முடிவெடுத்தால் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற நிலை ஏற்படும். பாஜகவை பொறுத்தவரைத் தமிழுக்கு இணக்கமாக குரல் கொடுத்தால் மட்டுமே கால் ஊன்ற முடியும்.
வடக்கில் இருந்து வருவோர் தமிழை கற்றுக் கொண்டு அழகாக பேசுகின்றனர். ஆந்திரா, கர்நாடகா சென்றால் அங்கு இந்தி பேசுகின்றனர். மொழி விவகாரத்தில் முதல்வருக்கு ஆதரவை அளிப்போம்.

அதிமுக ஒன்றிணைய வேண்டும். ஆனால், அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒத்து வர மறுக்கிறார். தற்போதுதான் ஆர்.பி.உதயகுமார் தொடங்கியுள்ளார். நான் ஓபிஎஸ்-ஐ விட்டு தூரமாக இருந்தாலும், உதயகுமார் சொல்வது சரியில்லை. ஓபிஎஸ் மிகவும் நல்லவர். ஆனால், வல்லவராக இல்லாததால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஓபிஎஸ் மீது அம்மா கோபமாக இருந்தார் என்ற பொய் குற்றச்சாட்டை உதயகுமார் கூறுகிறார். ஒரு நாளும் அம்மா அவரை அமைச்சரவையில் இருந்து விலக்கி பார்த்ததே இல்லை. ஜெயக்குமார் ஓபிஎஸ்-ஐ கொசு என்கிறார். அந்தக் கொசு மிகவும் ஆபத்தானது. மலேரியா, டெங்கு போன்றவை கொசுவிலிருந்துதான் வருகிறது. நாங்கள் இல்லாத தைரியத்தில் பேசுகிறார். ஓபிஎஸ் என்கிற கொசு கடித்தால் அவரால் தாங்க முடியாது.

எம்ஜிஆர், அம்மா புகைப்படமின்றி நடந்த அவிநாசி திட்டத்தின் விழாவில் உதயகுமாரும் பங்கேற்றுள்ளார். இவரைப் போன்றவர்களே கட்சியை இணையவிடாத வேலையைச் செய்கின்றனர். இது நீடித்தால் 2026 தேர்தலில் 26 சீட் கூட அதிமுகவுக்கு தேறாது. ஆர்.பி.உதயகுமாருக்கு டெபாசிட் போகும்.
செங்கோட்டையன் அடுத்த ஓபிஎஸ். தங்கமானவர், பொதுச் செயலாளரைவிட உயர்ந்தவர். அம்மாவுக்கு பின், ஓபிஎஸ்-க்கு முதல்வர் பதவி குத்தகை கொடுக்கப்பட்டதா எனக் கேட்கும் உதயகுமார், குத்தகை விலையை கொடுத்து எடுக்கலாமே. எடப்பாடிக்கு தமிழ் வார்த்தைகளே வராது. அவரை போய் புரட்சித் தமிழன் என்கின்றனர். இரட்டை இலை வழக்கில் எடப்பாடி பயந்து கிடக்கிறார். ஓபிஎஸ், சின்னம்மா தமிழ்மொழியைப் பற்றி பேச வேண்டும். மாநில அரசை மட்டும் பேசிவிட்டு மத்திய அரசை தவிர்ப்பது கூடாது" என்று புகழேந்தி தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிரிப்பு போலீஸ் மாதிரி அவரு சிரிப்பு அரசியல்வாதி.. யாரைக் கலாய்க்கிறார் ஓ. பன்னீர்செல்வம்..?
இதையும் படிங்க: சர்வாதிகார மனப்பான்மை... மத்திய அரசை சாடிய அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி..!