தமிழக பட்ஜெட்டில் பெருநகரங்களில் ஏற்பட்டு வரும் மக்கள் நெரிசலை தவிர்க்கும் வகையில் முதற்கட்டமாக சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் புதிய நகரம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நகரத்தில் என்னென்ன மாதிரியான வசதிகள் செய்யப்படவுள்ள என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்...
புதிய நகரம் உருவாக்கப்படுவது ஏன்?
சென்னை மாநகரத்தின் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்திட “வடசென்னை வளர்ச்சி திட்டம்” என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பேருந்து நிலையம் அமைத்தல், குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்துதல், குடிநீர் பணிகள், கல்வி மற்றும் மருத்துவ உட்கட்டமைப்பு பணிகள், ஏரிகள் மற்றும் குளங்கள் மேம்பாட்டுப் பணிகள், கடற்கரை மேம்படுத்துதல், மீன்சந்தை அமைத்தல், உடற்பயிற்சி நிலையம், பூங்காக்கள் மற்றும் விளையாட்டுக் கட்டமைப்பு பணிகள், மின்மையானங்கள் அமைத்தல், துணை மின் நிலையம் மற்றும் மின்மாற்றிகள் தரம் உயர்த்தும் பணிகள், பல வகை தொழில்நுட்பக் கல்லூரி அமைத்தல் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்குதல் போன்ற பணிகள் 6,858 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

இதையும் படிங்க: பட்ஜெட் தொடங்கியதும் நடையை கட்டிய அதிமுக... இதுதான் பிரச்சனையாம்!!
நாட்டிலேயே அதிக நகரமயமானது மற்றும் அதனுடன் எழும் சவால்களை சந்தித்து வரும் மாநிலங்களும் தமிழ்நாடும் ஒன்று. அதிலும் குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி மற்றும் மதுரை போன்ற நகரங்களை நோக்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வருவதால் உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சாலை வசதிகள், குடிநீர், தெருவிளக்குகள் மற்றும் கழிவு நீர் அகற்றல் போன்ற அடிப்படை தேவைகளையும், பேருந்து வசதிகள் கல்வி மற்றும் பொது சுகாதார வசதிகளும் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் வழங்கிட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார்.
சென்னைக்கு அருகே புதிய நகரம்:

எனினும் பெருநகரங்களின் விரிவாக்கம் ஆங்காங்கே நடைபெறுவதைக் காட்டிலும் பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்துவிடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவது மிகவும் பொருத்தமானது எனும் நகரமைப்பு வல்லுனர்களின் கருத்தை ஏற்று முதற்கட்டமாக சென்னைக்கு அருகே ஓர் புதிய நகரம் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் உருவாக்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.
என்னென்ன வசதிகள் உருவாக்கப்படவுள்ளன?
தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், நிதிநுட்ப வணிக மண்டலங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், வர்த்தக மையங்கள்,மாநாட்டுக் கூடங்கள் மட்டுமின்றி அரசு மற்றும் தனியார் துறையின் மூலம் கல்வி மற்றும் சுகாதாரச் சேவைகள் அளிக்கும் நிறுவனங்களும் இந்நகரத்தில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தின் உயர் வருவாய் கொண்ட வகுப்பினர், மத்தியதர வகுப்பினர் மற்றும் குறைந்த வருவாய் கொண்ட வகுப்பினர் என அனைவருக்குமான வீட்டு வசதிகள் நிறைந்த பன்னடக்கு கட்டடங்கள் கொண்டதாக இந்த நகரம் அமையும் எனக்குறிப்பிட்டுள்ளார்.

விரிவான சாலைகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை மின்சக்தி அமைப்புகள் பகிர்ந்த பணியிடச் சேவை மற்றும் நகர்ப்புற சதுக்கங்கள், பூங்காக்கள் போன்ற பொழுதுபோக்கு சேவை கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நகரில் இடம்பெறும் சென்னை மாநகரில் இப்புதிய நகரத்துடன் இணைத்திட உரிய சாலை வசதிகள், விரைவுப் பேருந்துகள், மெட்ரோ ரயில் விரிவாக்கம், ஆகியவையும் உருவாக்கப்படும் உலகத்தர வசதியுடன் கூடிய புதிய நகரத்தை குளோபல் சிட்டி உருவாக்கிடுவதற்கான முதற்கட்ட பணிகளை டெகோ நிறுவனம் விரைவில் தொடங்கும் என்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING ஏப்ரல் 30 வரை சட்டமன்ற கூட்டத்தொடர்... தமிழ்நாடு அரசு அறிவிப்பு...!