தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் சமூக வலைதளங்களால் அதிகம் கவனம் பெற துவங்கி உள்ளன. இந்நிலையில் கொலைக்குற்றவாளிகள் சிலர் பழிக்கு பழியாக மீண்டும் கொலைக்குற்றங்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. சகோதரர் கொலை, காதலி கொலை போன்ற நெருங்கிய உறவுகளின் மரணத்திற்கு பழி தீர்ப்பதற்காக சிலர் பாதை மாறி பயணிப்பதும் தொடர்கிறது. இந்நிலையில் சென்னையில் இதேபோல் இளைஞர் ஒருவரின் வீட்டில் இருந்து பட்டாக்கத்திகள், நாட்டு வெடிகுண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் வயது 24. இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆதம்பாக்கம் அருகில் உள்ள வாணுவாம்பேட்டை திருமலை தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், பார்த்திபன் தனது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள், பட்டாக்கத்திகள் போன்ற பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக சென்னை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தன. தகவலின் அடிப்படையில் அப்பகுதி போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இதையடுத்து உதவி ஆணையர் முத்துராஜ் தலைமையில் மோப்ப நாய் உதவியுடன் பார்த்திபன் வீட்டில் தீவிர சோதனை நடத்தினர்.
இதையும் படிங்க: இன்ஸ்டா ஐடி சொல்லு? தனியாக வந்த சிறுமிகளிடம் அத்துமீறல்.. கத்தியை காட்டி மிரட்டிய சிறுவர்கள் கைது..!

அப்போது அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த பட்டாக்கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் ரகசிய தகவலில் குறிப்பிட்ட மாதிரி நாட்டு வெடிகுண்டுகள் எவையும் கைப்பற்றப்பட வில்லை. இதையடுத்து மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய்கள், வீட்டை சுற்றி வந்து மீண்டும் பின்புறம் சென்று ஒரே இடத்தில் நின்று குரைத்துக் கொண்டே இருந்தது. இதையடுத்து நாய் குரைத்த இடத்தில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் பள்ளம் தோண்டி பார்த்தனர்.

அப்போது உள்ளே நாட்டு வெடிகுண்டு ஒன்று இருந்துள்ளது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அந்த வெடிகுண்டை வாலியில் மணல் நிரப்பி பாதுகாப்பாக எடுத்து சென்றனர். இதையடுத்து வீட்டில் இருந்த பார்த்திபனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. பார்த்திபனின் நண்பரான வினித் என்பவர் நாட்டு வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களை, பார்த்திபனிடம் கொடுத்து வீட்டில் பதுக்கி வைக்க சொல்லி இருந்தார் என போலீசர் விசாரணையில் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

மேலும், விசாரணையில் வினித்தின் சகோதரர் தனுஷ் என்பவரை கடந்த ஆண்டு சிலர் கொலை செய்ததையும் தெரிவித்துள்ளார். அவர்களை பழி தீர்க்க வினித், பார்த்திபன் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ராபின்சன், மலர் மன்னன் ஆகியோர் திட்டம் தீட்டி வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் வினித்தை போலீசார் கண்காணித்து வருவதால் கத்தி, நாட்டு வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களை பார்த்திபனிடம் கொடுத்து பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து பார்த்திபன், ராபின்சன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி வினித், மலர் மன்னனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சம்பவம் ஆதம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஓடும் பஸ்ஸில் கைவரிசை.. 15 ஆண்டுகளாக பலே திருட்டு.. கள்ளக்காதல் ஜோடி கைது..!