திருச்சியில் ஹெச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "வழக்கமாக அரசியல்வாதிகள் வீடுகளில்தான் அமலாக்கத் துறை சோதனை நடைபெறும். முதல் முறையாகத் தமிழக அரசின் டாஸ்மாக் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது. என்றாலும், 2 லட்சம் கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளதற்கு வாய்ப்பு உள்ளது.

டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அங்கு நடந்த மதுபான ஊழலில் தொடர்பிருக்கிறது. அது போல, இங்கு நடந்த டாஸ்மாக் ஊழலில் முதல்வருக்கும் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆதாரம் இருப்பதால்தான் அமலாக்கத் துறை டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றுள்ளது. அதனால், தமிழகத்தின் மணீஷ் சிசோடியா யார் என்பது விரைவில் தெரிந்துவிடும். இந்த டாஸ்மாக் ஊழலை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லவே மார்ச் 17 அன்று சென்னையில் பாஜக சார்பில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பாகவும் டாஸ்மாக் கடைகள் முன்பாகவும் போராட்டம் நடைபெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கைபோல உள்ளது. டாஸ்மாக் வருமானம் ரூ.52 ஆயிரம் கோடியாக இருக்கும் நிலையில், இந்த முறையும் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் தமிழகத்தின் மோசமான நிதி நிலைமையைச் சுட்டி காட்டுகிறது." என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் ரூ1 லட்சம் கோடி ஊழல்: திமுகவை காப்பாற்றும் பாஜக..? கொளுத்திப்போடும் சீமான்..!
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்... செந்தில் பாலாஜிக்கு புது தலைவலி!!