கடந்த 6 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அரசு மதுபான ஆலைகள், டாஸ்மாக் தலைமை அலுவலகம், டாஸ்மாக் அதிகாரிகள் அலுவலகங்கள், பாட்டிலிங் கம்பெனிகள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி ஏராளமான ஆவணங்களை அள்ளிச் சென்றது. இந்த ரெய்டு 3 நாட்கள் நடந்தது.

கடந்த வாரம் ரெய்டு குறித்து ஒரு அறிக்கையை அமலாக்கத்துறை அளித்தது. அதில் ரெய்டு ஏன் நடத்தப்பட்டது, என்னென்ன முறைகேடுகள், எவ்வளவு பணம் ஈட்டப்பட்டுள்ளது, மேலதிக விசாரணை நடக்கிறது என குறிப்பிட்டிருந்தது. இது தமிழக அரசியலில் புயலை கிளப்பியது. இதற்கு பதிலளிக்க முடியாமல் அரசு திணறியது. பாஜக பெரும் போராட்டத்தை கையிலெடுத்தது.
இதையும் படிங்க: அமலாக்கத்துறை மீது டாஸ்மாக் நிறுவனம் வழக்கு.. தொடர் விசாரணை நடத்த தடைகோரி மனு..!

இந்நிலையில் ரெய்டு சட்ட விரோதம், அமலாக்கத்துறை ரெய்டு மூலம் அதிகாரிகள் ஊழியர்கள் மிரட்டப்பட்டுள்ளனர், சட்டவிரோதமாக ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மாநில உரிமைகளை அமலாக்கத்துறை மீறுவதால் ரெய்டை ரத்து செய்து ஆவணங்களை ஒப்படைக்க கோரி தமிழக அரசும் டாஸ்மாக் நிறுவனமும் இணைந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. இது இன்று விசாரணைக்கு நீதிபதிகள் எம்.எஸ்.நமேஷ், செந்தில்குமார் அமர்வு முன் பட்டியலிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு என்ன கோரிக்கைகளை மனுவாக தாக்கல் செய்துள்ளது என்பது குறித்து பார்ப்போம்.

தமிழ்நாடு அரசு மற்றும் TASMAC ஒரே மனுவை தாக்கல் செய்துள்ளனர், ஏனெனில் அவர்கள் முன்வைக்கும் வழக்கு காரணமும், கோரும் நிவாரணங்களும் ஒரே மாதிரியானவை. நீதிமன்றம் இவர்கள் இணைந்து மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
* TASMAC-ன் சட்ட உரிமை மற்றும் அதிகார வரம்பு:
TASMAC என்பது தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு நிறுவனமாகும், இது 1983, மே 23 அன்று கம்பெனி சட்டத்தின் (Companies Act, 1956) கீழ் பதிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம், 1937 (Tamil Nadu Prohibition Act, 1937) அடிப்படையில் TASMAC-க்கு மதுபான விற்பனை மற்றும் விநியோக உரிமை வழங்கப்பட்டுள்ளது. TASMAC தமிழ்நாடு முழுவதும் சட்டப்படி மதுபான விநியோகத்தை நிர்வகிக்கிறது. இந்நிலையில் ED-யின் தலையீடு மாநில அரசின் அதிகாரத்தை மீறுவதாகும்.
ED நடத்திய சோதனையின் விவரம்...
ED தமிழ்நாட்டிலுள்ள தனியார் டிஸ்டில்லரிகள் (distilleries) கருப்பு பணத்தை உருவாக்குவதாக சந்தேகித்ததால் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனை 06.03.2025 (காலை 11:54) முதல் 08.03.2025 (இரவு 11:00) வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.
இது சென்னை எழும்பூர் TASMAC தலைமையகத்தின் 4-ம் மற்றும் 5-ம் மாடிகளில் நடத்தப்பட்டது.
இதில் ED அதிகாரிகள், இரண்டு உதவி இயக்குநர்கள் (Assistant Directors) மற்றும் CISF பாதுகாப்புப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அமலாக்கத்துறையின் சட்டவிரோத தேடுதல் மற்றும் பறிமுதல் நடைமுறை மீறல்:
ED அதிகாரிகள் சர்ச் வாரண்ட் உத்தரவை TASMAC அதிகாரிகளுக்கு காண்பித்தார்கள், ஆனால் அதன் பிரதியை வழங்கவில்லை. அதைப் படித்ததாக TASMAC அதிகாரிகளை கட்டாயமாக ஒப்புக்கொள்ள வைத்தனர்.
TASMAC அதிகாரிகள் மீது 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டு, கட்டாயமாக பதிலளிக்க வைத்தனர். அனைத்து பதில்களும் சட்டப்படி செல்லுபடியாகாதவை, ஏனெனில் அவை அழுத்தம் மற்றும் சட்டவிரோதமான அடைத்து வைத்தலின் கீழ் பெறப்பட்டவை.

* TASMAC ஆவணங்கள் மற்றும் சொத்துக்கள் சட்டவிரோதமாக பறிமுதல் செய்யப்பட்டது
* ED TASMAC-ன் பல முக்கிய ஆவணங்களை சட்டவிரோதமாக கைப்பற்றியது, அதில்:
பார் டெண்டர்கள் (Bar Tenders), போக்குவரத்து டெண்டர்கள் (Transport Tenders), MRP மீறல் அறிக்கைகள் (MRP Violation Reports - கடந்த 4 வருடங்களுக்கானவை) இந்த அனைத்து ஆவணங்களும் சட்டபூர்வமான பறிமுதல் விதிமுறைகளை பின்பற்றாமல் எடுத்துக் கொள்ளப்பட்டன.

அமலாக்கத்துறையின் அடிப்படை உரிமை மீறல்...
ED அதிகாரிகள் TASMAC ஊழியர்களின் உயிர், சுதந்திரம் மற்றும் மரியாதை ஆகியவற்றை முழுவதுமாக மீறியுள்ளனர். * 60 மணி நேரத்திற்கும் அதிக நேரம் TASMAC ஊழியர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டனர். * பெண்கள் ஊழியர்கள் அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு ஆளாகினர்.
மனுதாரர் (அரசு, டாஸ்மாக்) நீதிமன்றம் முன் கோரும் நிவாரணங்கள்:
* ED-யின் தேடுதல் மற்றும் TASMAC அதிகாரிகளை தடுத்து வைத்த நடவடிக்கைகளை சட்டவிரோதமானவை என்று அறிவிக்க வேண்டும்.

* ED இனி தமிழ்நாட்டில் எந்தவொரு விசாரணையையும் மாநில அரசின் அனுமதியின்றி செய்யக்கூடாது என்று அறிவிக்க வேண்டும்.
* ED TASMAC-ல் இருந்து சட்டவிரோதமாக பறிமுதல் செய்த அனைத்து ஆவணங்களையும் திருப்பித் தர நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
* தமிழ்நாடு அரசு மற்றும் TASMAC ஊழியர்களை மத்திய அரசின் சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

முடிவாக அரசு டாஸ்மாக்கின் கோரிக்கை....
தமிழ்நாடு அரசு மற்றும் TASMAC மாநில அரசின் உரிமைகள் மற்றும் ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ED-யின் அதிகார வரம்பு மீறல் தடுக்கப்பட வேண்டும் மற்றும் மாநில அரசின் அதிகாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. இது தவிர மேலும் பல விஷயங்கள் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமலாக்கத் துறை அறிக்கையால் ஆடிபோன திமுக.. தூக்கி எறியப்படும் திமுக ஆட்சி.. எல்.முருகன் ஆவேசம்!!