குப்பைகளை உரமாக்கும் மையங்களை மூடிவிட்டு எரிவுலைகளை அமைப்பதா? என்று பாரதிய ஜனதா எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார். தலைநகர் சென்னையின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சுமார் ஒரு கோடி மக்கள் வசிக்கும் சென்னை மாநகராட்சியில் குப்பை மேலாண்மை என்பது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. மாநகரின் பல இடங்களில் குப்பை குவிந்து கிடப்பதும், அதிலிருந்து துர்நாற்றம் வீசி, மக்களுக்கு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. அதுவும் பண்டிகை காலங்களில் சென்னை மாநகரம், குப்பை நகரமாகி விடுகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிக்குள் செயல்பட்டு வரும், மக்கும் குப்பையை உரமாக்கும் 168 மையங்களை மூட முடிவு செய்திருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. அது மட்டுமல்லாது, மக்காத கழிவுகளிலிருந்து மறுசுழற்சி செய்ய வாய்ப்புள்ள பொருட்களைப் பிரித்தெடுக்கும் 88 பொருள் மீட்பு வசதி மையங்களை (Material recover facility) மூடவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: தொடங்கியது ப்ளஸ் 1 பொதுத்தேர்வு... 8 லட்சம் பேர் எழுதுகின்றனர்..!
கழிவு மேலாண்மை பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சியின் இதுபோன்ற நடவடிக்கைகள் நிலைமையை மேலும் மோசமாக்கி விடும். இது கண்டனத்திற்குரியது.

உரமாக்கும் மையங்கள், பொருள் மீட்பு வசதி மையங்களில் இருந்து கடுமையான தூர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததால், அதை மூடும் முடிவை எடுத்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நுர்நாற்றம் வீசுவதை தடுத்து, மக்களுக்கு பாதிப்பில்லாமல் இந்த மையங்களை செயல்படுத்துவது சிறந்த நிர்வாகத்தின் அடையாளம்.
அதைவிடுத்து, துர்நாற்றம் வீசுவதாகக் கூறி, உரமாக்கல் மையங்களை மூடுவது, மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது போன்றது. மக்கும் குப்பையை உரமாக்குவதற்குப் பதிலாக, மூடிய அமைப்புக்குள், உயர் வெப்ப நிலையில் எரித்து சாம்பலாக்கும் எரிவுலைகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதனால் வெளிவரும் புகை சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேடு விளைவிக்கும்.

எனவே, குப்பையை எரிக்கும் எரிவுலை திட்டத்தை கைவிட்டு, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குப்பையை உரமாக்கும் மையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் நேரடியாக தலையிட்டு தலைநகர் சென்னையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்..
தகவலுக்காக... 1 கோடிக்கும் மேலான மக்கள்தொகை கொண்ட சென்னை மாநகரம் நாள்தோறும் 6,100 மெட்ரிக் டன் குப்பைகளை உற்பத்தி செய்கிறது. பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய 2 மாபெரும் குப்பைக் கிடங்குகள் உள்ளன.
இதையும் படிங்க: சாம்பல் புதன்..! கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி..!