இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அஸ்வின் இன்ஜினியரிங் படிப்பை விட்டுவிட்டு கிரிக்கெட்ராக அவதாரமெடுத்து பல போட்டிகளில் ருத்ரதாண்டவமாடி ஒரு தமிழனாக இந்திய அணிக்கு புகழ் சேர்த்தார்.
அவர் ஒரு ஓபனிங் பேட்ஸ்மேன், மித வேகப்பந்து வீச்சாளராகத் தான் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். ஆனால், அவருக்கு பெரிதும் கைகொடுத்தது ஆஃப் ஸ்பின். அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட அஸ்வின் பல சாதனைகளை படைத்துள்ளார். பிரிஸ்பேன் டெஸ்டுக்குப் பிறகு, செய்தியாளர் சந்திப்புக்கு வந்த அவர் தனது ஓய்வை அறிவித்தார்.
38 வயதான ரவிச்சந்திரன் அஸ்வின் 1986 செப்டம்பர் 17 அன்று சென்னை மயிலாப்பூரில் பிறந்தவர். அவரது தந்தை ரவிச்சந்திரன் ஒரு கிளப் கிரிக்கெட் வீரர். வேகப்பந்து வீச்சாளர். அஸ்வின் படிப்பிலும் படு கெட்டிக்காரர். சென்னையில், பள்ளிப்படிப்பை முடித்த அவர், எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் ஐடியில் பட்டம் பெற்றார். ஆனாலும், அப்பாவின் ஜீன்கள் அஸ்வினுக்குள்ளும் கிரிக்கெட் ஆர்வத்தை தூண்டியது. பொறியியல் படிப்பை முடித்து விட்டு கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டினார் அஸ்வின்.
அஸ்வின் தனது கிரிக்கெட்டின் ஆரம்பத்தை ஓபனிங் பேட்ஸ்மேனாகத்தான் தொடங்கினார் பலருக்கும் தெரியாத விஷயம். பின்னர் மித வேகப் பந்து வீச்சாளராக முயற்சித்துப்பார்த்தார். அவரது குழந்தை பருவ பயிற்சியாளர் சி.கே.விஜய் அவரை ஆஃப் ஸ்பின் பந்துவீசுமாறு அறிவுறுத்தவே சுழற்பந்து வீச்சை தேர்வு செய்தார். இதற்குப் பின்னால் இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவதாக, அஷ்வினின் உயரம் 6 அடி 2 அங்குலம். இது ஆஃப் ஸ்பின்னுக்கு ஏற்ற உயரம். இரண்டாவதாக, அவர் 16 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்டின் போது காயம் அடைந்து இருந்தார். அதன் பிறகு அவர் ஓடும்போது மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதையெல்லாம் உள்வாங்கி வைத்திருந்த அவரது பயிற்சியாளர் விஜய் அஸ்வினை சுழற்பந்து வீச்சாளராக பரிந்துரைத்துள்ளார்.
அஸ்வின் கிரிக்கெட் ரசிகர்களால் 'ஆஷ்' என்றே அழைக்கப்படுகிறார். 2006ல் ஹரியானாவுக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தை சொந்த மண்ணான தமிழகத்தில் விளையாடினார். இந்தப் போட்டியில் அவர் வீழ்த்தியது 6 விக்கெட்டுள். முதல் போட்டியிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
2010ல் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த அஸ்வின், ஜிம்பாப்வேக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமான அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2011ஆம் ஆண்டு டெல்லியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அறிமுகம். அந்தப் போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அதகளப்படுத்தி விட்டார்.
அந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பின்னே, அந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக அவரின்றி அந்தப்போட்டியில் வேறு யாராக இருந்திருக்க முடியும்? 2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் அஸ்வின் ஒரு அங்கம்தான்.
அஸ்வின் சர்வதேச 106 டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் 37 முறை ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 8 முறை 10 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையும் அவருக்கே உரியது. அஸ்வின் ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்டுகளையும், டி20யில் அஸ்வின் 72 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் தூணாக வலம் வந்தவர். சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 765 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.
சிறந்த பேட்ஸ்மேனாகவும் முத்திரை பதித்தவர் அஸ்வின். டெஸ்ட் கிரிக்கெட்டில் 3503 ரன்கள் எடுத்துள்ள அவர் மொத்தம் 6 டெஸ்ட் சதங்களை விளாசியுள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் மொத்தம் 8 சதங்கள் அடித்து அசத்தியவர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 250, 300 மற்றும் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் அஸ்வின். இந்திய அணிக்காக அதிவேகமாக 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450 மற்றும் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் அஸ்வின். அஸ்வின் நான்கு போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை படைத்த ஒரே இந்தியர் இவர்தான்.
ஒரு சீசனில் அதிகபட்சமாக 82 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் அஸ்வின். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இடது கை பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கி சாதனைக்கு சொந்தக்காரர் அஸ்வின். இந்தியாவில் மட்டும் அஸ்வின் அதிகபட்சமாக 383 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரேட்டிங் புள்ளிகள் பெற்ற வீரர் அஸ்வின்.
2016 ஆம் ஆண்டிலேயே, அஸ்வின் ஐசிசியின் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரரானார். 2015 ல் அர்ஜுனா விருது பெற்றார். 2011 முதல் 2020 வரையிலான பத்தாண்டுகளில் டெஸ்ட் அணியில் அஸ்வினை அசைக்கமுடியவில்லை.