முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. 166 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 4 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
3-வது வீரராகக் களமிறங்கி கடைசி ஓவர் வரை களத்தில் நின்று, 55 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் இருந்தது. அந்த நேரத்தில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருடன்(26)இணைந்து, 38 ரன்கள் பார்ட்னர்ஷிப், அர்ஷ்தீப் சிங்குடனும், ரவி பிஸ்னாயுடனும் சேர்ந்து தலா 20 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து திலக் வர்மா அணியை கரை சேர்த்தார்.

இந்த ஆட்டத்தில் திலக் வர்மா மட்டும் நிலைத்து பேட் செய்யாமல் இருந்திருந்தால், இந்திய அணி 120 ரன்களுக்குள் சுருண்டு தோல்வி அடைந்திருக்கும். அல்லது இங்கிலாந்து அணி கூடுதலாக 20 ரன்கள் சேர்த்திருந்தாலும் நிலைமை தலைகீழ்தான்.
இங்கிலாந்து அணி கைமேல் கிடைத்த வெற்றியை கோட்டைவிட்டது என்றுதான் சொல்ல முடியும். 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு தொடர்ந்து நெருக்கடி அளிக்கத் தவறியது, சரியான பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தாதது தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் கூடுதலாக 20 ரன்கள் சேர்த்திருந்தாலே வெற்றி இங்கிலாந்துக்குதான் என உறுதியளித்திருக்கலாம். ஏனென்றால், இந்திய பேட்டர்களின் பேட்டிங் நேற்று அந்த அளவு மோசமாக இருந்தது. ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 16-வது ஓவரும், மார்க்உட் வீசிய 13-வது ஓவரும்தான் வெற்றியை இந்திய அணிக்கு தாரைவார்த்த தருணங்களாக அமைந்தன.

இந்திய அணி இந்தஆட்டத்தில் 5 சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டு பந்துவீசியது. வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, அக்ஸர் படேல், ரவி பிஸ்னாய், அபிஷேக் சர்மா என 14 ஓவர்களை சுழற்பந்தாக வீசி 118 ரன்களையும், 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது. இங்கிலாந்து பேட்டர்கள் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள அச்சப்படுகிறார்கள் எனத் தெரிந்து அவர்களுக்கு 5 முனைத்தாக்குதலையும் சுழற்பந்துவீச்சு மூலம் இந்திய அணி கொடுத்தது. ஆனாலும், ரன் சேர்க்கப் போராடிய இங்கிலாந்து அணி கடைசி நேரத்தில் நடுவரிசை பேட்டர்களின் பின்ச்ஹிட் ஆட்டத்தால் 165 ரன்களைச் சேர்த்தது. கடந்த போட்டியிலாவது ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்திருந்தார், இந்த ஆட்டத்தில் அந்த அணியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை.
இங்கிலாந்து அணி 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் அதன்பின் கிடைத்த தருணத்தைஇந்திய பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தவில்லை. ஜேம் ஸ்மித், பிரைடன் கார்ஸ் ஓரளவுக்கு ஸ்கோர் செய்து அணியைக் காப்பாற்றினர்.
இதையும் படிங்க: 7 ஆண்டுகளுக்குப்பின் சேப்பாக்கத்தில் டி20: இங்கிலாந்து பேட்டர்களை கலங்கடிப்பார்களா இந்திய ஸ்பின்னர்கள்

அதிலும் பிரைடன் கார்ஸ் 17 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உள்பட 31 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார், அதேபோல, ஜேம் ஸ்மித் 2 சிக்ஸர்கள், ஒருபவுண்டரி என 12 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து கடைசி நேரத்தில் இங்கிலாந்து அணிக்கு உதவினர். இவர்கள் இருவரின் விக்கெட்டையும் இந்திய பந்துவீச்சாளர்கள் எடுத்திருந்தால் ஆட்டம் 100 ரன்களுக்குள் முடிந்திருக்கும்.
5 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள்,அதன்பின் 75ரன்களை அடிக்க வாய்ப்பளித்துள்ளனர். ஹர்திக் பாண்டியா 2 ஓவர்கள் வீசி 6 ரன்கள் கொடுத்து ஒருவிக்கெட் வீழ்த்திய நிலையில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கவில்லை. அதேபோல வாஷிங்டன் சுந்தருக்கும் ஒரு ஓவர் மட்டுமே வழங்கப்பட்டது, இவர்களை சரியாகப் பயன்படுத்தியிருந்தால் இங்கிலாந்து ஸ்கோரை கட்டுப்படுத்தியிருக்கலாம்.

இந்திய அணி இந்த ஆட்டத்தில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தமைக்கு பேட்டர்களின் தவறான ஷாட்களே முக்கியக் காரணம். இந்திய அணியில் திலக்வர்மா(72) ரன்களுக்கு அடுத்தார்போல் அதிகபட்ச ஸ்கோர் வாஷிங்டன் சுந்தர் சேர்த்த 26ரன்கள்தான். பெரிய பேட்டிங் வரிசையை இந்திய அணி வைத்திருந்தாலும் எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவும் இல்லை, களத்தில் நிலைத்து நிற்கவும் இல்லை.
இங்கிலாந்து அணி கூடுதலாக 20 ரன்கள் சேர்த்திருந்தால் நிச்சயம் இந்திய அணியின் பேட்டர்களின் சொத்தையான ஆட்டத்தால் தோல்வியைத்தழுவியிருக்கும்.
களத்துக்கு வந்தவுடன் பெரிய ஷாட்டுக்கு முயற்சிக்கும் பேட்டர்கள், பந்துவீச்சையும், ஆடுகளத்தின் தன்மையையும் கணிக்க தவறிவிட்டனர்.
அபிஷேக் சர்மா(12), சாம்ஸன்(5), சூர்யகுமார்(12) சொற்ப ரன்களிலும் நடுவரிசையில் ஹர்திக் பாண்டியா(7), துருவ் ஜூரெல்(4) இருவரும் ஏமாற்றினர், இருவரும் ஓரளவுக்கு கைகொடுத்திருந்தால், பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் திலக்வர்மா ஆட்டத்தை கடைசிஓவர் வரை இழுத்திருக்கமாட்டார். 58 ரன்கள்வரை இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது, ஆனால் அடுத்த 20 ரன்களில் 3 விக்கெட்டுகளை வேகமாக இழந்தது. அவசரம், பொறுமையின்மை, தவறான ஷாட்களை ஆடியதால்தான் பேட்டிங் வரிசை குலைந்தது.

ஆட்டத்தை தவறவிட்ட இங்கிலாந்து
இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் அதில் ரஷித் கட்டுக்கோப்பாக பந்துவீசினாலும், இவர் கோட்டைவிட்ட கேட்ச் வெற்றிக்கே உலைவைத்துவிட்டது. வாஷிங்டன் சுந்தர் அடித்த கேட்சை ரஷித் தவறவிட்டதால்தான் திலக்-சுந்தர் பார்ட்னர்ஷிப் அமைக்க முடிந்தது. ஒருவேளை ரஷித் இந்த கேட்சை பிடித்திருந்தால் ஆட்டம் வேறுவிதமாகத் திரும்பியிருக்கும். மார்க் உட் வீசிய அந்த ஓவரை சரியாகப் பயன்படுத்திய சுந்தர் ஒருசிக்ஸர், 2 பவுண்டரி விளாசி 18 ரன்களைச் சேர்த்து 19 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தரின் பிஞ்ச் ஹிட்டிங்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றிய தருணமாகும்
கடைசி 3 ஓவர்களில் இந்திய அணி வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் செட்டில் பேட்டர் திலக்வர்மாவும், டெய்லெண்டர் ரவி பிஸ்னாய் இருந்தனர். கார்ஸ் வீசிய 18-வது ஓவரில் ஏதாவது விக்கெட் இழந்துவிடுவோமா என அச்சப்பட்ட நிலையில் பிஸ்னாய் அருமையான பவுண்டரி அடித்து நெருக்கடியைக் குறைத்தார். கடைசி 2 ஓவர்களில் இந்திய அணி வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.

19-வது ஓவரை லிவிங்ஸ்டோன் வீசினார். இந்த ஓவரை பிஸ்னாய், திலக் கட்டுக்கோப்பாக ஆடினர். லிவிங்ஸ்டோன் வீசிய 5வது பந்தில் பிஸ்னாய் பவுண்டரி அடிக்க பதற்றம் குறைந்தது. கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. ஓவர்டன் வீசிய முதல் பந்தில் 2 ரன்களும், அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து திலக் வர்மா வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இதையும் படிங்க: சென்னை சேப்பாக்கத்தில் இன்று இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி.. இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா.?