அண்மையில் இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் 2025 ஐ.பி.எல்.தொடருக்காக தயாராகி வருகிறார். இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்பாக அஸ்வின் அவருடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கிறார். அதில், "ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து போட்டிக்கு முன்பு வரை இனி ஒருநாள் கிரிக்கெட்டுக்கு எதிர்காலம் இருக்குமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் இப்போது டி20 போட்டிகளைக் காணவே ரசிகர்கள் அதிகம் வருகின்றனர். இதற்குக் காரணம், டி20 நான்கு மணி நேரத்துக்குள் முடிந்துவிடுகிறது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் போன்ற புதிய அணிகளின் கட்டமைப்பு மேம்பட்டவுடன் டெஸ்ட் கிரிக்கெட் மேலும் சிறந்து விளங்கும் என்று நான் நம்புகிறேன்.

ஆனால், ஒருநாள் போட்டிகள் பற்றி அப்படி நினைக்கவில்லை. 2013-14 வரை ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் ஒரு பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால், 2015ஆம் ஆண்டில் புதிய விதி அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு ஐந்து ஃபீல்டர்கள் மட்டுமே உள்வட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஒரு இன்னிங்ஸில் இரண்டு பந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதுபோன்ற விதிகளால் பல வழிகளில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சின் ஆதிக்கம் குறைய காரணமானது என்று நினைக்கிறேன். இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.
ரிவர்ஸ் ஸ்விங் என்கிற பந்துவீச்சு இப்போது விளையாட்டிலிருந்தே போய்விட்டதால், இது கிரிக்கெட் விளையாட்டை பெருமளவில் பாதிக்கிறது. விரல் சுழலின் பங்கும் குறைந்துவிட்டது. தென் ஆப்பிரிக்காவில் 2027ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இத்தொடர் ஐசிசிக்கு உண்மையிலேயே சவாலாக இருக்கும். ஒரு நாள் கிரிக்கெட் மிகவும் மெதுவாக செல்வதால் இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஐசிசிக்கு உள்ளது. என் மனதில் ஒரு கேள்வி ஓடிக்கொண்டே இருக்கிறது.
இதையும் படிங்க: தென்னாப்பிரிக்காவின் சூறாவளி பவுலிங்கில் சுருண்ட இங்கிலாந்து... 180 ரன்கள் இலக்கு!!

இன்றைய கிரிக்கெட்டில் 50 ஓவர் கிரிக்கெட்டுக்கு இடம் இருக்கிறதா, இல்லையா என்பதுதான் அது. ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து போட்டி வரை தொடர் சலிப்பூட்டுவதாக இருந்தது. எனவே, ஒருநாள் கிரிக்கெட் போட்டி பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரம் இது." என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பேயாட்டம் ஆடிய தென்னாப்பிரிக்கா... மிரண்டு போன இங்கிலாந்து!!