இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் சிட்னி டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 2 நாட்கள் மட்டுமே ஆட்டம் நடைபெற்று, அதிலும் இரண்டு இன்னிங்ஸ்கள் நிறைவடைந்த நிலையில், மூன்றாவது இன்னிங்சிலும் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இருப்பினும் இந்திய அணி 145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆனால், அணியின் கேப்டனும், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ராவின் உடற்தகுதிதான் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆட்டத்தின் இரண்டாவது நாளில், பும்ரா திடீரென மைதானத்தை விட்டு வெளியேறி மருத்துவமனைக்குச் சென்றது இந்திய அணி வீரர்கள், ரசிகர்களின் இதயத் துடிப்பை அதிரிக்க வைத்துள்ளது. தற்போது பும்ராவுக்கு முதுகுவலி ஏற்பட்டுள்ளதாகவும், அவரை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

தொடரின் கடைசி டெஸ்டின் இரண்டாவது நாள் ஜனவரி 4 சனிக்கிழமை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. இன்றைய இன்னிங்ஸில் பும்ரா அபாரமாக பந்துவீசியதோடு, மார்னஸ் லாபுசாக்னேவின் விக்கெட்டையும் கைப்பற்றினார். பின்னர் தொடர்ந்து விளையாடிய அவர் திடீரென மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த காட்சியை பார்த்த இந்திய அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: 47 ஆண்டுகால சாதனையை முறிடியத்த பும்ரா... ஆஸி. எதிராக அதிக விக்கெட்டுகள் குவித்து சாதனை..
பும்ரா டிரஸ்ஸிங் அறையிலிருந்து பயிற்சி ஜெர்சியில் வெளியே வந்தார். பின்னர் அணியின் மருத்துவர்களுடன் காரில் மைதானத்திற்கு வெளியே சென்றார்.
சிறிது நேரம் கழித்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் தொடங்கியபோது, பும்ரா மைதானத்திற்கு திரும்பினார். ஆனால் அவருக்கு என்ன காயம் என்பதை அறிய அனைவரும் காத்திருந்தனர். செய்தியாளர் சந்திப்பிற்கு வந்த வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, பும்ராவின் உடற்தகுதி குறித்த அப்டேட்டை தெரிவித்தார். அவர் முதுகுவலியால் அவதிப்படுவதாக கூறினார். பிரசித் கூறுகையில், “பும்ராவுக்கு முதுகு பிடிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் அவரைக் கண்காணித்து வருகின்றனர்” என்றார்.

இதனால், பும்ரா இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீச முடியுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்தத் தொடரில் வெற்றிகரமான பந்துவீச்சாளராக பும்ரா திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், இந்திய அணிக்கு அவரின் பங்களிப்பு முக்கியத் தேவையாக உள்ளது. ஆனால், பும்ரா அரை உடற்தகுதியுடன் பந்துவீசுவதற்கு களமிறங்க வேண்டுமா இல்லையா என்பதுதான் இந்திய அணிக்கு முன் உள்ள குழப்பம்.
இந்திய அணி இந்த ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது மட்டுமின்றி அடுத்த மாதம் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபியிலும் நுழைய வேண்டும் என்பதால், அங்கு வெற்றி பெறுவது பும்ராவின் பந்துவீச்சைப் பொறுத்தே இருக்கும் என்பதால் இது இந்திய அணிக்கு இக்கட்டான நிலை.
பும்ராவின் காயம் தீவிரமாக இருந்தால், அவர் பல நாட்கள் ஓய்வெடுக்க வேண்டியிருக்கும். இது இந்திய அணிக்கு ஆபத்தானது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பும்ரா வெளிப்படுத்திய அற்புதமான ஆட்டத்திற்கு முன், அவர் ஒரு வருடம் மைதானத்திற்கு வெளியே இருந்தார். அதற்கு காரணம் முதுகில் ஏற்பட்ட காயம்தான். பும்ரா மீண்டும் காயத்தால் அவதிப்பட்டு நீண்ட காலம் ஓய்வெடுப்பதை இந்திய அணி விரும்பவில்லை.
இதையும் படிங்க: ரோஹித் சர்மா, விராட் கோலியின் மோசமான ஃபார்ம்- இந்திய அணி நிர்வாகம் எடுத்த அதிரடி..! அட, பும்ராவுக்குமா..?