'கைதி 2’ படம் குறித்த அறிவிப்பை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மார்ச் 14 அன்று தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருடைய பிறந்த நாளையொட்டி திரையுலக பிரபலங்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். பிறந்த நாளையொட்டி நடிகர் கார்த்தியை லோகேஷ் கனகராஜ் இன்று சந்தித்து பேசினார்.

இந்தச் சந்திப்பின் போது லோகேஷ் கனகராஜூக்குக் காப்பு ஒன்றை பரிசாக கார்த்தி அணிவித்தார். இந்தச் சந்திப்பின் புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள கார்த்தி, ‘தில்லி ரிட்டன்ஸ்’ என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இந்தக் கூட்டணி சார்பில் மீண்டும் ‘கைதி 2’ படம் வெளியாக உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவரும் இணைந்து பணிபுரிய இருப்பதையும் உறுதிப்படுத்தி உள்ளனர்.
2019இல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'கைதி' படம் ரூ.25 கோடியில் தயாரிக்கப்பட்டது. இப்படம் ரூ.105 கோடி வசூல் ஈட்டியது. தற்போது ‘கைதி 2’ படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கவுள்ளன. இந்த ஆண்டின் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

லோகேஷ் கனகராஜ் உருவாக்கியுள்ள யுனிவர்ஸின் முதல் படம் ‘கைதி’. இதன் தொடர்ச்சியாக ‘விக்ரம்’, ‘லியோ’ ஆகிய படங்களை லோகேஷ் இயக்கியுள்ளார். தற்போது மீண்டும் ‘கைதி 2’ படத்தினை இயக்கவுள்ளார். இந்த யுனிவர்ஸின் இறுதிப்படமாக ‘விக்ரம் 2’ இருக்கும் என பல பேட்டிகளில் உறுதிப்படுத்தி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இதையும் படிங்க: நயன் – தனுஷ் இடையே தொடரும் சர்ச்சை… இறுதி தீர்ப்பு எப்போ தெரியுமா?
இதையும் படிங்க: சேட்டன்கள் எப்படிதான் இப்படி படம் எடுக்குறாங்களோ.. இணையத்தைக் கலக்கும் ஆசிப் அலியின் ரேகாசித்ரம்..!