2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகளில் பாஜகவும் ஒன்று. பின்னர் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இதற்கு பின்னர் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், வலுவான கூட்டணியுடன் இருந்த தி.மு.க. 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால் அதிமுக மற்றும் பாஜக தனி தனியாக தேர்தலை சந்தித்ததால் அவர்கள் இருவரும் ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

இதை அடுத்து எதிர்வர இருக்கும் சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜகவை இணைக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று திடீரென டெல்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தனியாக பேசியுள்ளார். சுமார் 15 நிமிடங்கள் அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுக- பாஜக கூட்டணி உறுதியானது... அமித் ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி..!

முன்னதாக இதுக்குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் யாரை சந்திக்க செல்கிறார் என்று தெரியும். அவர் சந்திக்கும் நபரிடம் இருமொழி கொள்கையை வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால், டெல்லி சென்ற எடப்பாடி, அதற்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது, கடந்த மாதம் திறக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட வந்தேன் என்று கூறிவிட்டு சென்றார். இதனால், டெல்லியில் நடப்பது என்ன? அடுத்தடுத்து டெல்லி செல்வதற்கான காரணம் என்ன? என பல கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.

இதனிடையே தமிழ்நாட்டில் பாஜக அதிமுக கூட்டணியை உறுதி செய்யும் விதமாக 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும் என்று அமித் ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பைத் தொடர்ந்து அமித்ஷா இவ்வாறு பதிவிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: காலையில் ஜி.கே.வாசன் போட்ட ரூட்… மாலையில் அமித் ஷாவுடன் எடப்பாடியார் மீட்..! அனல் கிளப்பும் அரசியல்..!