நயன்தாராவின் வெற்றிப்படங்களில் மூக்குத்தி அம்மனுக்கு தனியிடம் உண்டு. அந்த ராசியை தொடர அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் தீவிரம் காட்டி வந்தார் நயன்தாரா. தனது ரவுடி பிக்சர்ஸ் மட்டும் தயாரித்தால் அதன் பட்ஜெட் கட்டுப்படி ஆகாது என்பதால் இயக்குநர் சுந்தர்.சி. இந்த ப்ராஜெக்ட்டுக்குள் வர வைத்தார். அப்படி வந்தவர் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை தானே இயக்குவதாக முடிவு செய்தார். நயன்தாராவும் ஒப்புக்கொள்ள அதன்பிறகு படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக தொடங்கின..

நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ், சுந்தர்.சி.யின் அவ்னி சினி மேக்ஸ், ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து அதிக பொருட்செலவில் மூக்குத்தி அம்மன் - 2-ஐ எடுக்க திட்டமிட்டுள்ளன. சுந்தர்.சி. என்றாலே இசை ஹிப்ஹாப் ஆதி தானே.. ஆம், அவரே தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இதையும் படிங்க: நயன்தாரா நடிக்கும் படத்துக்காக ரஜினி வாழ்த்து... ஆரம்பமே இப்படியா!!
இப்படத்திற்கான பூஜை சென்னையில் இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்காக பெரிய கோயில் போன்றதொரு செட் போடப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு அச்சுஅசல் உண்மையான கோயில் போன்றே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பூஜையில் பங்கேற்பதற்காக சிவப்பு நிற புடவையும், சிவப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்தபடி வந்த நயன்தாராவைக் காண ரசிகர்கள் திரண்டு விட்டனர். படத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர் - நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என ஏராளமானோர் படபூஜையில் பங்கேற்றனர்.

பூஜையும், யாகமும் முடிந்தபிறகு படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இசையில் இந்த பர்ஸ்ட் லுக் வெளியானது. கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மூக்குத்தி அம்மன்-2 உருவாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்தில் சுந்தர்.சி.இயக்கத்தில் வெளிவந்த மதகஜராஜா சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததில், அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். லாஜிக் எல்லாம் தேவையில்லை, மக்களுக்கு தேவை மேஜிக் என்பதே சுந்தர்.சி.யின் தாரகமந்திரம். அதுவும் மூக்குத்தி அம்மன் மாதிரியான சப்ஜெக்ட் கிடைத்தால் சுந்தர்.சி.க்கு அல்வா சாப்பிடுவது மாதிரி..
ஒருபக்கம் நயன்தாரா, மறுபக்கம் சுந்தர்.சி.... இந்த காம்போ வெற்றியை குவிக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐசரி கணேஷ்... படத்தையும், பார்க்கப்போகும் ரசிகர்களையும் அந்த மூக்குத்தி அம்மன் தான் காக்க வேண்டும்...
இதையும் படிங்க: ஆர்.ஜே.பாலாஜியை வேண்டாம் என்றாரா நயன்தாரா..? மூக்குத்தி அம்மன் 2-ம் பாகத்திற்கு இயக்குநர் மாறியது ஏன்..?