×
 

காற்றில் கலந்தார் நடிகர் மனோஜ்.. பெசண்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம்..!

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் உடல் இன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டு புதிய பாதையில் நடைபோடச் செய்த மாமேதை இயக்குநர் இமயம் பாரதிராஜா. அதுவரை ஸ்டூடியோவுக்குள் சிறைபட்டிருந்த தமிழ் சினிமா பறவையை சிறகு விரித்து காடு,மலை,மேடு என இயற்கையின் பாதையில் சுற்றிவரச் செய்தவர் அவர். 

அவர் இயக்கிய முதல் படமான 16 வயதினிலே சமயத்தில் பிறந்தவர் தான் அவரது மகன் மனோஜ். பிள்ளைமீது மாளாத பாசம் கொண்டதால் தான் தன்னுடைய படக் கம்பெனிக்கு மனோஜ் கிரியேஷன்ஸ் என்று பெயர் சூட்டினார் பாரதிராஜா. 

இதையும் படிங்க: ரஜினிக்கே டூப்… வீட்டிலேயே மயங்கி கிடந்த மனோஜ்... நெஞ்சைப் பிடித்து சரிந்த சோகம்..!

நடிப்பு வராதவர்களைக் கூட நடிக்க வைத்த பெருமை பாரதிராஜாவுக்கு உண்டு. தன் மகன் சுயமாக அவனாக மேலே வரவேண்டும் என்று ஆரம்ப புள்ளியை மட்டும் வைத்து விட்டு அவனாக பட்டுத்தெளிந்து வரவேண்டும் என ஒதுங்கிக் கொண்டார். தாஜ்மகால் படத்தில் மகனை கதாநாயகனாக்கிய அவர் அடுத்தடுத்து பிற இயக்குநர் படங்களில் நடிக்க அனுமதித்தார்.

ஏனோ, காலம் மனோஜ்-க்கு உரிய வாய்ப்புகளை வழங்கவில்லை. ஆனாலும் மனம் துவண்டு போகாமல் இயக்குநராகவும், சின்னத்திரையிலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார் மனோஜ். 2006-ல் சக நடிகையான நந்தனாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்த்திகா, மதிவதினி என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 

2 வருடங்களுக்கு முன்னர் மார்கழித் திங்கள் என்ற படத்தை இயக்கி இருந்தார் மனோஜ். அதில் தன்னுடைய தந்தை பாரதிராஜாவை நடிக்க வைத்து தந்தைக்கான மரியாதையையும், நன்றியையும் வெளிப்படுத்தினார். இந்நிலையில் இதயநோயால் பாதிக்கப்பட்ட அவர் நேற்றிரவு அகால மரணம் எய்தினார். அவருக்கு வயது 48. 

தகவலறிந்தது முதல் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகினரும் மனோஜ்-ன் வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். செய்வதறியாது திகைத்துப்போய், உறைந்துபோய் விட்ட இயக்குநர் பாரதிராஜாவுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் அவர்களும் மௌனத்தையே கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் பெசண்ட் நகர் மின்மயானத்தில் மனோஜ் உடல் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் இருந்து உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெறும். மகனுக்கு தந்தை கொள்ளிவைக்கும் கொடுமை எந்த தந்தைக்கும் வரக்கூடாது. இந்த உளச்சோர்வில் இருந்து பாரதிராஜா மீண்டுவர இயற்கை அருள்புரியட்டும்.

இதையும் படிங்க: #BREAKING: திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..! அதிர்ச்சியில் திரையுலகம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share