சூர்யா ரசிகர்களுக்கு பொங்கல் பரிசு ..ரெட்ரோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூர்யா ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக ரெட்ரோ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. சுமார் ரூ.350 முதல் ரூ.400 கோடி வரை செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரூ. 2000 கோடி வரை வசூல் செய்யும் என படக்குழுவினர் நம்பிக்கையாக தெரிவித்து வந்த நிலையில், இந்த படத்தில் இருந்த தொய்வு ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. ஒரு சிலர் 'கங்குவா' திரைப்படம் நன்றாக இருக்கிறது என கூறினாலும், திரைப்படம் வெளியான கையோடு எதிர்கொண்ட விமர்சனங்களே, இந்த படத்தின் தோல்விக்கு காரணம் என திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் படக்குழுவினர் மற்றொருபுறம் குற்றம்சாட்டினர்.
சூர்யாவுக்கு 'கங்குவா' படம் கைவிட்டாலும், தற்போது அடுத்தடுத்து வித்யாசமான மற்றும் ரசிகர்களை கவரும் விதமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் சூர்யா - 44 என நீண்ட நாள்களாக அழைக்கப்பட்டு வந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் - நடிகர் சூர்யா கூட்டணி திரைப்படத்தின் பெயர் டீசரை கடந்த டிச. 25 ஆம் தேதி வெளியிட்டனர். ஆக்சன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ரெட்ரோ எனப் பெயரிட்டுள்ளனர். இதில், பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டீசரில் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு எந்த வசனமும் இல்லாமல் இருந்தது. இதுகுறித்து, ரசிகர்களிடம் கேள்விகள் எழுந்த நிலையில், இப்படத்தில் பூஜா வாய் பேச முடியாதவராக நடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது.
தற்போது சூர்யா ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக ரெட்ரோ திரைப்படம் மே. 1 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் ஒரு கேங்ஸ்டார் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி உள்ளார் சூர்யா. மேலும் 70-ஸ் டூ 80-ஸ் கெட்டப்பில் சூர்யா நடித்துள்ளார். அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து வரும் கார்த்திக் சுப்புராஜ் கண்டிப்பாக சூர்யாவுக்கு எப்படி ரோலக்ஸ் கேரக்டர் அதிகம் பேசப்பட்டதோ அதேபோல் ரெட்ரோ கேரக்டரையும் பேசவைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: செல்வராகவன் கொடுத்த புத்தாண்டு பரிசு.. 7ஜி ரெயின்போ காலனி-2