நாட்டின் பிரதமர், குடியரசு தலைவருக்கு நிகரான அதிகாரம் பொருந்திய பதவியாகவும், அவர்கள் மீதான தவறுகளை விசாரிக்கும் அதிகாரம் படைத்ததாகவும் நீதித்துறை விளங்குகிறது. இத்தகைய நீதித்துறை மீதுள்ள நம்பிக்கையால் மட்டுமே, மக்கள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, கட்டுக்கோப்பான சமூகமாக வாழ்கின்றனர்.
தங்களது கடமைகளை சரிவர செய்து, உரிமைகளை கேட்டுப் பெறுகின்றனர். இந்நிலையில் இத்தகைய நீதித்துறையில் சிலரின் தவறான நடவடிக்கை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் யஷ்வந்த் வர்மா. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். கடந்த 4 ஆண்டுகளாக யஷ்வந்த் வர்மா டெல்லி உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 14ம் தேதி நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டிலும் அவரது குடும்பத்தினர் ஹோலி கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் யஷ்வந்தர் வர்மா மட்டும் வீட்டில் இல்லை. அப்போது அவரது பங்களா வீட்டில் ஒரு அறையில் மட்டும் தீ விபத்து ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடன் பில் கேட்ஸ் திடீர் சந்திப்பு... பின்னணி என்ன?

இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்களும் நீதிபதி வீட்டில் திரண்டனர். 2 தீயணைப்பு வாகனங்கள் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சிறுது நேரத்திலேயே தீயை அணைத்தனர். அப்போது தான் அந்த அறையில் கட்டுகட்டாக பணம் இருந்ததை தீயணைப்பு வீரர்கள் பார்த்துள்ளனர். அவ்வளவு பணம் எப்படி அந்த அறையில் வந்தது என்பது குறித்து சந்தேகம் அடைந்த அவர்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிற்கும் தகவல் சென்றது. இதையடுத்து உச்சநீதிமன்ற கொலிஜியம் உறுப்பினர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் யஷ்வந்த் வர்மாவை டெல்லியில் இருந்து மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் யஷ்வந்த் வர்மா மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இருப்பினும், ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலீஜியத்தின் சில உறுப்பினர்கள், இடமாற்றத்துடன் இந்த வழக்கு விடப்பட்டால், இந்த சம்பவம் நீதித்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என தெரிவித்தனர். அது மட்டுமல்லாமல், நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கையையும் இது சிதைக்கும் என்று கருதினர். நீதிபதி யஷ்வந்த் வர்மாவை ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும் என்றும், அவர் மறுத்தால் நாடாளுமன்றத்தால் அவரை நீக்குவதற்கான முதல் படியாக, தலைமை நீதிபதியால் உள்ளக விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இனியும் அவமானங்களை தாங்க முடியாது.. பெற்றோருக்கு பெண் எழுதிய உருக்கமான கடிதம்..!