தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் சார்பில் நடிகர் தனுஷ் இயக்கி இருக்கும் படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோவம். வருகிற 21-ந் தேதி இத்திரைப்படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ட்ரெண்ட்டிங்கில் உள்ளது. குறிப்பாக கோல்டன் ஸ்பேரோ என் நெஞ்சுக்குள்ள ஏரோ என்ற பாடல் இன்ஸ்டாவை கலக்கியது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
முழுக்க முழுக்க இளைஞர்கள் அவர்களது காதல்கள் என்று இன்றைய தேதிக்கு எது செல்லுபடியாகுமோ அதனை திரைப்படமாக எடுத்துள்ளார் தனுஷ். அதற்கு ஏற்றார்போல் பவிஷ், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் மற்றும் அனிகா, பிரகாஷ் வாரியர் என இளமைப் பட்டாளத்தை களமிறக்கி உள்ளார் இயக்குநர் தனுஷ். நடிகர் தனுசின் ஆஸ்தான நடன இயக்குநரான பாபா பாஸ்கர் தான் இப்படத்திலும் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் இன்று வெளியானது. துவக்கக் காட்சியில் தோன்றும் தனுஷ், இது ரொம்ப வழக்கமான கதை என்று எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி வரும்படி ரசிகர்களை தயார்படுத்துகிறார். அதற்கு ஏற்றார்போல் இரண்டு காதல் ஜோடிகள், அதுவும் காதல் தோல்வி ஜோடிகள் புதிய காதலுக்கு எப்படி தயாராகிறார்கள் என்கிற இன்றைய காலகட்டத்திற்கான கதைக்கரு.
இதையும் படிங்க: சர்வதேச விழாவில் "நெட்பேக்" விருதை தட்டிச் சென்ற "பேட் கேர்ள்"..
சமீபத்தில் தமிழில் வரக்கூடிய படங்கள் சாதிய, இன ரீதியான சிக்கல்களை அதிக அளவில் பேசக்கூடிய வகையில் மிகவும் கனமான கதைக்களங்கோடு தான் காணப்படுகின்றன. வாய்விட்டு சிரித்து, குடும்பத்துடன் கொண்டாடக்கூடிய வகையிலான படங்கள் வருவதே அரிதாகிவிட்டது. அதனால் தான் 12 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டு இந்த பொங்கலுக்கு ரிலீசான விஷாலின் மதகஜராஜா, யாரும் எதிர்பாராத வகையில் பெரும் வெற்றி பெற்றது.

சமூக சீர்திருத்தக் கருத்துகளோடு படங்கள் வருவது முக்கியம் தான், அதேசமயம் கவலையை மறந்து சிரிக்கக் கூடிய படங்களும் மக்களுக்குத் தேவையாயிருக்கிறது. அந்தவகையில் நிலவுக்கு என்மேல் என்னடி கோவம், ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: என் கழுத்தில் கத்தி... வேலைக்காரி கீதா இல்லையென்றால்… நடுக்கத்துடன் சம்பவத்தை விளக்கிய சைஃப் அலி கான்..!