×
 

Run it Up ... மீண்டும் கலக்கும் Hanumankind..!

கேரளாவில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வரும் சூரஜ் செருகாடு என்ற இயற்பெயர் கொண்ட Hanumankind-ன் பாடல்கள் இந்தியா மட்டுமல்லாது ஒட்டுமொத்த இசையுலகையும் பித்து பிடிக்கச் செய்கிறது.

இசை என்றாலே இந்தியாவில் திரையிசை தான்... அதனைத் தாண்டி ஒளிர்நட்சத்திரங்களாக ஜொலித்தவர்கள் ஒன்றிரண்டு பேர் மட்டுமே. சிதார் இசைமேதை பண்டிட் ரவிஷங்கர், ஷெனாய் இசைக்கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லா கான், தபேலா ஜாம்பவான் ஜாகிர் ஹுசைன், புல்லாங்குழல் இசைமேதை ஹரிபிரசாத் சௌராஸியா, கடம் இசைக்கடவுள் விக்கு விநாயக்ராம், சந்தூர் இசைமேதை பண்டிட் சிவக்குமார் ஷர்மா ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்கள் அனைவருமே ஏதேனும் ஒரு இசைக்கருவியில் மேதைமை பொருந்தியவர்கள். பாடகர்கள் வரிசையில் வைத்துப் பார்த்தால் பண்டிட் பீம்சென் ஜோஷி, லதா மங்கேஷ்கர், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரை கூறலாம். ஆனாலும் அவர்களும் திரைத்துறையின் மூலமே மக்களிடம் சென்று சேர்ந்தார்கள்.

ஆனால் மேற்கத்திய, ஐரோப்பிய இசை மரபை எடுத்துக் கொண்டால் அங்கு இசை என்பது தன்னிச்சையான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் திரையிசையை அவர்கள் இரண்டாம் பட்சமாகவே பார்க்கின்றனர். மரபார்ந்த இசை மரபில் புலமைப் பெற்றவர்களையே அவர்கள் கொண்டாடுகிறார்கள். பாப், ஜாஸ், ப்ளுஸ், கண்ட்ரி, ராக், ராக் அண்ட் ரோல், ஹிப்ஹாப், ராப்,டிஸ்கோ, சல்ஸா என்று ஏராளமான இசை வகைமைகளை குறிப்பிட முடியும். இதில் ஒவ்வொருத் துறையிலும் ஆழங்கால் பட்ட மேதைகள் ஏராளம், ஏராளம். நாம் அறிந்த சில பெயர்களை குறிப்பிட வேண்டுமென்றால் பாப் என்றால் மைக்கேல் ஜாக்சன், ஜாஸ் என்றால் ட்யூக் எல்லிங்டன் என்று பலரை வரிசைப்படுத்த முடியும்..

இதையும் படிங்க: காதல் கணவருடன் இறுக்கி அணைத்தபடி நடிகையின் க்யூட் கிளிக்..! ஒரே சிரிப்புதான் மொத்த நியூயார்க்கும் குளோஸ்..!

ஆனால் இந்தியாவில் திரையிசையைத் தாண்டி தனியிசையாக வென்றவர்கள் என்று பார்த்தால் கண்ணுக்கு எட்டியவரை தெரியவில்லை. 1990-களில் இந்தியில் ஒருசில முயற்சிகள் நடைபெற்றன. அப்போதுதான் பாப் இசை கலாச்சாரம் இந்திய இளைஞர்களிடையே பரவிய நேரம். ஆனால் தனியிசையாக வெற்றி பெற்ற உடனேயே அவர்களை இந்தி சினிமா உள்ளிழுத்து தின்று செரித்தது. பாடகர் லக்கி அலி, கஸல் மேதை பங்கஜ் உதாஸ் இப்படி ஒரு பட்டியல் உண்டு.

2000-த்திற்கு பிறகு இசையில் அவ்வப்போது புதுப்புது முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் மிக சமீபமாகவே சுயாதீன இசைக்கலைஞர்கள் மக்களால் பார்க்கப்படவும், கொண்டாடப்படவும் செய்கிறார்கள். தமிழில் சாய் அப்யங்கர் என்ற இளைஞர் கடந்த ஆண்டு சினிமா பாடல்களை விடவும் அதிகப்படியான ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பாடல்களை தந்தார். இப்போது அவரும் சினிமாவுக்கு சென்று கொண்டிருக்கிறார் என்பது தனிக்கதை. 

ஆனால், கேரளாவில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வரும் சூரஜ் செருகாடு என்ற இயற்பெயர் கொண்ட Hanumankind-ன் பாடல்கள் இந்தியா மட்டுமல்லாது ஒட்டுமொத்த இசையுலகையும் பித்து பிடிக்கச் செய்கிறது. 2019 முதல் பாப் இசையில் பாடல்களை அவர் இயற்றி வந்தாலும் கடந்த ஆண்டு அவர் எழுதி, இசையமைத்து பாடிய Big Dawgs அதிரிபுதிரி ஹிட். ஒரு உண்மையான ஆப்ரிக்க-அமெரிக்கன் போன்று எழுத்தில், உச்சரிப்பில், அந்த பாடல் பட்டையைக் கிளப்பியது. 

அதன் சூடு கொஞ்சமும் குறையாமல் இப்போது Hanumankind வெளியிட்டுள்ள பாடல் தான் Run it Up... தென்னிந்திய பண்பாடு, கலாச்சாரம், வீரம் ஆகியவற்றை களமாக கொண்டு உருவாகியுள்ள இந்த பாடல் கடந்த 10 நாட்களாக இணைய இசை உலகை சூறையாடிக் கொண்டிருக்கிறது. எப்படி பாப் மார்லி ஒரு கலகக்காரனாக அறியப்பட்டானோ, அதுபோன்று இசையின் மூலமாக மரபை, மாண்புகளை, கேள்விக்குள்ளாக்குகிறார் Hanumankind. 

நீங்களும் கேட்டு துள்ளாட்டம் போடுங்கள்... Run it Up
 

இதையும் படிங்க: இளையதளபதி ஜோடியின் சூப்பர் லுக் போட்டோ.. விருது வாங்க இப்படி ஒரு காஸ்டியுமா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share