கும்பமேளா கோலாகலம்.. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் தமிழக கவர்னர் ரவி இன்று புனித நீராடினார். தேசத்தின் நலனுக்காக பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று கோலாகலகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி வரை என 45 நாட்கள் நடைபெறுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த புனித நிகழ்வில் இதுவரை 55 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடி வழிபட்டுள்ளனர். குறிப்பாக, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தரபிரதேச அமைச்சர்கள் உட்பட ஏராளாமான அரசியல் தலைவர்கள் இதில் புனித நீராடி உள்ளனர்.
மகா கும்பமேளா இன்னும் ஓரிரு நாட்களில் முடிய உள்ளதால் இந்தியா முழுவதிலும் இருந்து, பிரயாக்ராஜ் நோக்கி மக்கள் படையெடுப்பது அதிகரித்துள்ளது. திரும்பும் திசையெல்லாம் மனித தலைகளாகவே தென்படுகின்றன. பிரயாக்ராஜ் வரும் மக்கள் மட்டுமல்லாமல், அங்கே புனிதநீராடிவிட்டு திரும்பும் பக்தர்களாலும் வாகனங்கள் நிரம்பி வழிவதால், கடுமையான் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எதையும் பொருட்படுத்தாத மக்கள் கும்பமேளாவில் பங்குபெற பிரயாக்ராஜ் நோக்கி படையெடுத்தபடி உள்ளனர்.
இதையும் படிங்க: கும்பமேளாவில் குளித்த விஜயகாந்த் குடும்பம்..! நெத்தியில் பட்டையோடு போட்டோ..!
இதற்கிடையே கும்பமேளாவின், திரிவேணி சங்கம நீர் குளிக்க உகந்தது அல்ல என மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் அறிக்கை அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திரிவேணி தண்ணீரில் கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் இருப்பதாகவும் இது மனித கழிவுகளால் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது. இது உத்தரபிரதேச அரசியலில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில சட்டசபையில் பிப்ரவரி 19-ஆம் தேதி அறிக்கை ஒன்றை சமரிபித்தார். அதில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையை முழுமையாக நிராகரித்தது மட்டுமின்றி, திரிவேணி சங்கமத்தில் உள்ள நீர் குளிப்பதற்கு மட்டுமின்றி குடிப்பதற்கும் உகந்தது என்று கூறினார்.
அப்போது சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜகவை சேர்ந்த தலைவர்கள் அந்த நீரை குடித்து, அதில் குளித்தால் மட்டுமே கங்கை சுத்தமாக உள்ளது என்று நாங்கள் நம்புவோம் என்று தெரிவித்தார். இந்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிரயாக்ராஜ் நகருக்கு இன்று வருகை தந்தார். திரிவேணி சங்கமத்திற்கு வந்த கவர்னர் அங்கு புனித நீராடினார். இதனை முன்னிட்டு அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியா முழுவதிலுமிருந்து மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து வந்த எண்ணற்ற கோடிக்கணக்கான இந்துக்களுடன் சேர்ந்து, பிரயாகராஜின் புண்ய தீர்த்தத்தில் திவ்ய, பவ்ய மகாகும்ப மேளாவில் புனித நீராடி, தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளின் நல்வாழ்வுக்காகவும், நமது மாபெரும் தேசமான பாரதத்தின் இணக்கமான செழிப்புக்காகவும் பிரார்த்தனை செய்தேன். இங்கு காற்றில் பரவியுள்ள தீவிர நேர்மறை ஆற்றல் அனைவரையும் ஆழமாகத் தொட்டு, மற்றவர்களுடன் இணைக்கிறது. சுமார் 60 கோடி சனாதனிகள் ஏற்கனவே புனித நீராடிய இந்த தனித்துவமான மற்றும் பிரமாண்டமான சனாதன தர்ம விழா, மறுமலர்ச்சி பெற்ற ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரதத்தின் உறுதியான சான்றாகும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாரணாசியில் சிக்கி தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்கள்... கும்பமேளா கூட்டத்தால் ரயிலில் ஏற முடியாமல் தவிப்பு..!