தமிழகத்தில் உள்ள கோவில்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட கருத்து தெரிவித்து இருந்தார். கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில் அடிப்படை வசதிகளைக் கூடச் செய்யாமல், கோவில் உண்டியல் பணத்தைக் கொள்ளையடிப்பதில் மட்டும் குறியாக திமுக அரசு இருப்பதாகவும், பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களில் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது பல நாள் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், எந்தப் பணிகளும் செய்யாத அறநிலையத்துறைக்கு வாகனங்கள் வாங்கி அலங்கரித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர் என்றும் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில், தமிழக கோவில்களில் கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் உயிரிழந்தது தொடர்பாக சட்டசபையில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அமைச்சர் சேகர்பாபு பேசினார். அப்போது, திருச்செந்தூர், தஞ்சாவூர், பழனி, ராமேஸ்வரம் உள்ளிட்ட 4 கோவில்களிலும் ஏற்பட்ட உயிரிழப்பு என்பது விபத்தின் காரணமாக அல்ல. உடல்நலக்குறைவின் காரணமாக நடைபெற்ற சம்பவம் என்று விளக்கமளித்தார். தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பிறகுதான் அதிகமாக கூட்டம் கூடுகின்ற கோவில்களுக்கு மருத்துவ வசதி தேவை என்ற நிலையில், 17 கோவில்களுக்கு மருத்துவ வசதியை ஏற்படுத்தி கொடுத்து உள்ளோம் என்று கூறினார்.
இதையும் படிங்க: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்... கோவை, மதுரை மக்களுக்கு அமைச்சர் சொன்ன குட்நியூஸ்..!

கடந்த 2023-ம் ஆண்டு கார்த்திகை தீபத்தன்று ஒரு நீதிபதி நோய்வாய் பட்டு மயங்கிய சூழ்நிலையில் அவரின் உயிரை காப்பாற்றியது அங்கு மருத்துவ முகாமில் இருந்த மருத்துவர்கள் தான் என்றும் இந்த 17 மருத்துவமனைகளில் இதுவரையில் 7 லட்சத்து 16 ஆயிரத்து 187 பேர் சிகிச்சை பெற்று இருக்கிறார்கள் எனவும் கூறினார்.

வெகு தொலைவில் இருந்து வரும் பக்தர்கள் உணவிற்கு என்ன செய்வார்கள் என்று சிந்தித்து, 2 கோவிலில் இருந்த அன்னதானத் திட்டத்தை 11 கோவில்களுக்கு விரிவுபடுத்தி ஆண்டிற்கு மூன்றரை கோடி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் இன்று கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகமாக இருக்கிறது என்றால் முதலமைச்சர் எடுத்த பெரும் முயற்சிகள் தான் காரணம் எனவும் குறிப்பிட்டார் . சுமார் ரூ. 1711 கோடி மதிப்பில் பெருத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சேகர் பாபு சட்டசபையில் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெல்லி பயணம் இதுக்குதான்... ரகசியத்தை போட்டுடைத்த எடப்பாடி!!