பொதுவாகவே ஒரு நாளைக்கு கிட்ட தட்ட 50 முதல் 100 முடி இழைகள் உதிர்வதும் பின்னர் அது முளைப்பதும் சாதாரணமான நிகழ்வு என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதனைத் தவிர்த்து உடல் உபாதைகள், கொரானா போன்ற பெருந்தொற்றுக்கள் ஏற்பட்டு கொத்து கொத்தாக முடி உதிர்கிறது என்றால் அது கவனிக்க வேண்டிய விஷயம். சரியான வாழ்க்கை முறை, சத்துள்ள உணவுகள், மருந்துகள் சாப்பிட்டு பராமரிப்பதன் மூலமாக தடுத்து நிறுத்தலாம் என்றாலும், இயற்கையான எளிமையான வழிகளிலும் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம்.
முடி உதிர்வை கட்டுப்படுத்தும் ஹேர் மாஸ்க் ;
தேவையான பொருள் ;
கருஞ்சீரகம் - 2 ஸ்பூன்
ஊறவைத்த வெந்தயம் - 4ஸ்பூன்
தயிர் - 1 கப்
கருவேப்பிலை - 1கை பிடி
விளக்கெண்ணெய் - 2 ஸ்பூன்

முதலில் ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் கருஞ்சீரகத்தை லேசாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் ஏற்கனவே நான்கு மணி நேரம் ஊற வைத்த வெந்தயம், ஒரு கைபிடி அளவு கருவேப்பிலை, ஒரு கப் தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும். இதனுடன் விளக்கெண்ணெய் சேர்த்து மீண்டும் ஒரு முறை மைய அரைத்துக் கொள்ளலாம். இந்த விழுதை தலை முடியின் வேர்க்கால்களில் நன்றாக படும்படி தேய்த்து, பின்பு முடி முழுவதும் பூசி அரைமணி நேரம் கழித்து மைல்ட் ஷாம்புகள் பயன்படுத்தி குளித்து வரலாம்.
இதையும் படிங்க: கொய்யா இலையில் இவ்வளவு நன்மைகளா ? உடனே போய் அதை பறிச்சிட்டு வாங்க
கருஞ்சீரகத்தில் முடி வளர்ச்சியை தூண்டும் இரும்பு சத்து, வைட்டமின் - A, B, C, துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. வெந்தயம் தலையை குளிர்ச்சியாக வைப்பதால் முடி கொட்டுவது நிறுத்தப்படுவதோடு பொலிவுடனும் இருக்க உதவுகிறது. கறிவேப்பிலையில் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளதால் முடிக்கு நல்ல ஊட்டச்சத்தாக விளங்குகிறது. தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட் பொடுகை விரட்டி நல்ல ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. விளக்கெண்ணெய் உடல் சூட்டை தனித்து தலையை குளிர்ச்சியாக வைப்பதால் முடி வளர்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துகிறது. எனவே, வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வை கட்டுப்படுத்த முடியும்.

முடி வளர ஹேர் மாஸ்க்;
பெரிய நெல்லிக்காய் - 2
சிறிய வெங்காயம் - 5
கற்றாழை ஜெல் - 2 ஸ்பூன்
இரண்டு பெரிய நெல்லிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும், இதனுடன் 5 சிறிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு பொருட்களிலும் நீர் சத்து நிறைந்துள்ளதால் தண்ணீரை ஊற்றாமல் அரைத்தல் அவசியம். இதனுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலந்து தலைமுடியின் வேர்க் கால்களில் படும்படி தடவி மசாஜ் கொடுக்கவும். மீதமுள்ள கலவையை முடிகளின் நுனிவரை தடவிவிட்டு கொண்டையாக போட்டுக் கொள்ளவும். அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பிறகு மிதமான ஷாம்பூவை பயன்படுத்தி தலை குளித்து வரவும்.
வைட்டமின் சி சத்து நிறைந்துள்ள நெல்லிக்காய், முடி உதிர்வை தடுத்து புதிதாக முடி வளர்ச்சியை தூண்டும் பண்பு கொண்டது. தலையில் அரிப்பு, பொடுகு போன்ற பிரச்சினைகளை களைய பெரிதும் துணை புரிகிறது. சிறிய வெங்காயத்தில் அதிகளவு சல்பர் நிறைந்துள்ளதால், புதிதாக முடி வளர துணை புரியக்கூடியது. கற்றாழை உடல் சூட்டை தனித்து குளிர்ச்சியை தருவதால் முடி வளர்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கி தருகிறது. எனவே வாரம் இருமுறை இந்த கலவையை செய்து பலன் அடையலாம்.

முடி நீளமாக அடர்த்தியாக வளர ;
பச்சைப் பயிறு - 100 gm
கறிவேப்பிலை - 50 gm
வாழைப்பழம் - 4
பச்சைப்பயிறு, கறிவேப்பிலை இரண்டையும் வெயிலில் நன்றாக காய வைத்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும். ஒரு மிக்சி ஜாரில் அரைத்த பொடி இரண்டு ஸ்பூன், நறுக்கிய வாழைப்பழம் நான்கு சேர்த்து தண்ணீர் விடாமல் மைய அரைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தேங்காய் பால் சேர்த்து கொள்ளலாம். நன்றாக மைய அரைத்த இந்த விழுதை தலையின் வேர் பகுதி முதல் நுனி முடி வரை முழுவதுமாக தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலை குளித்து வரவும்.
பச்சைப்பயிற்றில் வைட்டமின் A சத்து, ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நிறைந்துள்ளதால் பொடுகை விரட்ட உதவுகிறது. மேலும் இதி்லுள்ள புரதம் முடிக்கு நல்ல ஊட்டச்சத்தை தந்து உதிர்வை தடுக்கிறது. கறிவேப்பிலையில் உள்ள இரும்பு சத்து முடி வளர பயன்படுகிறது. வாழைப்பழத்திலுள்ள பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்துக்கள் முடிக்கு வலுவைத்தருகிறது.
இவ்வாறு நாம், வீட்டிலுள்ள பொருட்களை வைத்து முடி வளர்ச்சியை தூண்டி அடர்த்தியான ஆரோக்கியமான முடி அழகை பெறலாம்.
இதையும் படிங்க: தலை முடி நரைக்குதா? கவலை வேண்டாம்... இதை செய்யுங்க