குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பூப்பெய்திய சிறுமிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்களில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை (HFSS) அதிகம் உள்ள உணவுகள், நிறமிகள், ரசாயனங்கள் மற்றும் செயற்கை சுவையூட்டிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு வீட்டிற்கு எடுத்துச் செல்லும் ரேஷன் பொருட்கள் மற்றும் சூடான சமைத்த உணவுகள் ஆகியவற்றில் அதிக அளவு சர்க்கரை, உப்பு மற்றும் பிற பொருட்கள் இருப்பதை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தலை தெரிவித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலர் ஜோதிகா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மிஷன் போஷன் 2:0 திட்டத்தின் கீழ் பல்வேறு வகை பயனாளிகளுக்கு வீட்டிற்கு எடுத்துச் செல்லும் ரேஷன் பொருட்கள் மற்றும் சூடான சமைத்த உணவுகள் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையைப் பயன்படுத்தக்கூடாது, தேவைப்பட்டால் இனிப்புக்காக வெல்லத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிலும் வெல்லம் என்பது சுவைக்காக 5 சதவீதத்துக்கு குறைவாகவே இருக்க வேண்டும், அதிகமாகச் சேர்க்கக் கூடாது.
அனைத்து தரப்பினர், பாலினத்தவர்களுக்கு உலக சுகாதார அமைப்பு இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்படி, அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகள், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும், தேவைப்பட்டால் சர்க்கரையும், உப்பும் ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்க குறைந்தபட்சம் பயன்படுத்தலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலை குழந்தைகள் மருத்துவரும், என்ஏபிஐ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், அருண் குப்தா வரவேற்றுள்ளார். அவர் கூறுகையில் “முதல்முறையாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சர்க்கரை, உப்பு ஆகியவை கர்ப்பணிப் பெண்கள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்துப் பொருட்களில் கலந்திருப்பது குறித்து கவலை தெரிவித்து அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தலை தீவிரமாகப் பின்பற்றினால், லட்சக்கணக்கான குழந்தைகள், கர்ப்பணிகள், பதின்மவயது சிறுமிகள் உடல்நலத்தைப் பாதுகாக்கலாம். இளம்வயதிலேயே குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் நீ்ரிழிவு நோய் வராமல் பாதுகாக்கலாம்.

அது மட்டுமல்லாமல் உணவு கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், நிறமிகள், செயற்கை சுவையூட்டிகள் பயன்பாட்டையும் மத்திய அரசு நெறிமுறைப்படுத்த வேண்டும். குழந்தைகள், பதின்மவயது குழந்தைகலுக்கு பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை வழங்காமல் தவிர்ப்பது உடல்நலத்துக்கு நல்லது. இதுபோன்ற உணவுப் பொருட்களில் அதிக அளவு சர்க்கரை, உப்பு, கொழுப்புச்சத்து கலந்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.