வாழ்க்கை முறை நோய்கள் என்ற அதிர்ச்சியூட்டும் 'அமைதியான தொற்றுநோய்' இந்தியாவை ஆட்டிப்படைத்து வருவதாக, அப்பல்லோ மருத்துவமனையின் 2025 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சுகாதார அறிக்கையின் ஐந்தாவது பதிப்பு இன்று வெளியிடப்பட்டது.
2.5 மில்லியனுக்கும் அதிகமான சுகாதார பரிசோதனைகளில் இருந்து பெறப்பட்ட இந்த அறிக்கை, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவை அம்பலப்படுத்துகிறது. எதிர்வினை சிகிச்சையில் இருந்து முன்கூட்டியே தடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

பரிசோதிக்கப்பட்டவர்களில் 65% பேர் கொழுப்பு நிறைந்த கல்லீரல் நோயாளிகளாக உள்ளனர். அதில் 85% பேர் மது அருந்தாதவர்கள். 26% பேர் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள். 23% பேர் நீரிழிவு நோயாளிகள். பலர் சோதனை செய்யப்படும் வரை தங்கள் நிலைமைகளைப் பற்றி அறியாதவர்களாக இருந்தனர்.
அறிகுறிகளுக்காகக் காத்திருக்காதீர்கள். வரு முன் காத்து ஆரோக்கியத்தை உங்கள் முன்னுரிமையாக ஆக்குங்கள் என்று அறிக்கை வலியுறுத்துகிறது. கொழுப்பு கல்லீரல், மாதவிடாய் நின்ற பிறகு உடல்நலக் குறைவு, குழந்தைப் பருவ உடல் பருமன் ஆகியவை காலத்தின் மாற்றமாகக் காட்டுகிறது.

தற்போது நாட்டின் நல்வாழ்வின் மூலக்கல்லாக வருமுன் தடுப்பதே சுகாதாரப் பராமரிப்பு என்று வலியுறுத்திய அப்பல்லோ தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி, பள்ளிகள், பணியிடங்கள் மற்றும் வீடுகளில் அதன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்கிறார்.
மாதவிடாய் நின்ற பெண்களில், நீரிழிவு நோய் 14% இலிருந்து 40% ஆகவும், உடல் பருமன் 76% இலிருந்து 86% ஆகவும், கொழுப்பு கல்லீரல் 54% இலிருந்து 70% ஆகவும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், பரிசோதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்களில் மூன்றில் ஒருவர் அதிக எடை, பருமனாக இருக்கின்றனர். 19% உயர் இரத்த அழுத்தம் வாழ்க்கை முறை நோய்கள் இளைய வயதினரைத் தாக்குகின்றன.

மன ஆரோக்கியம், தூக்கக் கோளாறுகளும் பெரிய அளவில் உள்ளன. பரிசோதிக்கப்பட்ட 47,000 பேரில், 6% பேர் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். இது நடுத்தர வயதுடையவர்களிடையே உச்சத்தை எட்டியுள்ளது. அதே நேரத்தில் 25% பேர் இதய நோய், சோர்வுடன் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயத்தை எதிர்கொண்டனர்.
வைட்டமின் டி குறைபாடு 77% பெண்களையும் 82% ஆண்களையும் பாதித்துள்ளத்து.அறிகுறியற்ற நபர்களில் 46% பேர் ஆரம்பகால இதய நோய் அறிகுறிகளைக் காட்டியுள்ளது. இந்தியா ஒரு சுகாதார நெருக்கடியின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், சிகிச்சையை விட தடுப்புக்கு முன்னுரிமை அளிக்க தேசிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அந்த அறிக்கை கோருகிறது.