பெண்களுக்கு சினைப்பை நீர் கட்டிகள் வருவது என்பது மிகவும் சாதாரண ஒரு விஷயமாக இன்று உள்ளது. குறைந்தது 25 நாட்களில் இருந்து அதிகபட்சமாக 35 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி என்பது இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் 45 நாட்களோ அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறையோ மாதவிடாய் சுழற்சி சீரற்று இருக்கும் போது மருத்துவர்களை நாடிச் சென்றால், பரிசோதனையில் சினைப்பையில் சிறுசிறு நீர் கட்டிகள் இருப்பதை கண்டறிகின்றனர். பாலிசிஸ்டிக் ஓவரி என்று இதனை அழைப்பர். இதற்கு பலக் காரணங்கள் கூறப்பட்டாலும், மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது சிறு வயதிலிருந்தே அதிகமாக இனிப்பு சேர்பது, பிராய்லர் கோழிகள், பொறித்த உணவுகள் சாப்பிடுவது தான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கு நம் வீட்டிலேயே செய்யும் சில வைத்திய முறைகள் நிச்சயம் நல்ல பலனைத் தரும்.

சோற்றுக் கற்றாழை ஒரு கீற்றை வெட்டி தோல் நீக்கி சோற்றுப்பகுதியை நன்றாக 10 முறை அலசி பின்பு அதனுடன் ஒரு டம்பளர் மோர் சேர்த்து மிக்சியில் அரைத்து அரை மூடி எலுமிச்சை மற்றும் தேவையான அளவு இந்து உப்பு சேர்த்து குடிக்கவும். இதனை தொடர்ந்து நாற்பது நாள் குடித்து வருவது கருப்பையில் உள்ள அழுக்குகள், கட்டிகள் நீங்கி மாதவிடாய் கோளாறு சரியாகும். முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி நல்ல பொலிவையும் இந்த சோற்றுக்கற்றாழைத் தரும்.
இதையும் படிங்க: கொத்தமல்லி இலை, விதை எது நல்லது? குழப்பம் வேண்டாம்

மாதவிடாய் சமயத்தில் கர்ப்பப்பை சுத்தமாக கருப்பட்டி, பனைவெல்லம், பூண்டு இந்த மூன்றையும் சமளவு எடுத்து நன்றாக இடித்து கொள்ள வேண்டும். இதனை ஒரு நெல்லிக்காய் அளவுக்கு வெறும் வயிற்றில் காலை சாப்பிட்டு வரவேண்டும். மாதவிடாய் வரும் அந்த நாட்களில் மட்டும் இதனை சாப்பிட வேண்டும். கர்ப்பப்பையில் தேங்கியுள்ள அழுக்குகள், அதிகப்படியான காற்றுகள் கூட வெளியேறிவிடும்.

ஒழுங்கற்ற மாதவிடாயை சரி செய்ய சதகுப்பை, கருஞ்சீரகம், வெந்தயம் இவை மூன்றையும் சமமளவு எடுத்து பொன்னிறமாக வறுத்து பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும் . இதனை தினமும் சுடு தண்ணீரில் கால் தேக்கரண்டி சேர்த்து கசாயமாக குடித்து வரலாம். வெந்தயம் அதிக இரும்பு சத்துக்களும், நார் சத்துக்களும் நிறைந்துள்ளது. சக்கரை வியாதியை கட்டுப்படுத்தும் தன்மைக் கொண்டது. சதகுப்பை இயற்கையாகவே ரத்தத்தை சுத்தப்படுத்தும் எனவே கர்பப்பை சுத்தமாகும். கருஞ்சீரகம் கொலஸ்டரோல் அளவை கட்டுப்படுத்துவதோடு இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. எனவே இந்த மூன்று பொருளையும் இளம் சூட்டில் வறுத்து அதனை பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும். இதனை மதியம் அல்லது மாலை வேளைகளில் கால் தேக்கரண்டி தண்ணீரில் போட்டு கசாயமாக குடித்து வரலாம். சாப்பாட்டிற்கு ஒரு மணி நேரம் முன் அல்லது பின் சாப்பிட்டு வரலாம்.

மாதவிடாய் காலங்களில் தொப்புளில் விளக்கெண்ணெய் தினம் தோறும் இரவில் வைத்து தூங்கி வர வயிறு குளுமையடைந்து அடி வியிற்றில் வலி ஏற்படாதவாறு பார்த்து கொள்ளும். ரோஸ் குல்கந்த் 1 ஸ்பூன் வீதம் காலை மற்றும் இரவு வேளைகளில் எடுத்து வரலாம்.
நம் மாறிவரும் உணவுப் பழக்கத்தால் உடலிலும் மாற்றங்கள் அடைந்து அது மிகப் பெரிய பின் விளைவுகளைத் தருகிறது. குறிப்பாக குழைந்தையின்மைக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே, நம் உணவில் செய்யும் மாற்றங்கள் நல்ல பலனை தரும் என்பதில் சந்தேகம் வேண்டாம். நாம் சேர்க்கும் கீரைகள், காய் கறிகளில் அதிக நார் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது சக்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி இரத்தத்தை சுத்தமாக வைப்பதோடு குடலையும் ஆரோக்கியமாக வைக்கிறது. கைக்குத்தல் அரிசி, தவிட்டுடன் உள்ள அரிசி, கோதுமைகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள் இதுவே சிறந்த உணவாக பார்க்கப்படுகிறது. சமையலில் நல்லெண்ணெய் பயன்படுத்துவது, கருப்பு எல்லை தினமும் சாப்பிட்டு வருவது, கல்யாண முருங்கை இலை உணவில் சேர்த்து வருவதும் நல்ல பயன் தரும்.
சிறு வயதிலிருந்தே குழந்தைகளை வெளியில் விளையாட விடாமல் இருப்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. உடல் வியர்க்க விளையாடுவது, சில நேரங்களில் தைராய்ட் உள்ளிட்ட ஹோர்மோன் பிரச்சினைகளை கூட தவிர்க்க உதவுகிறது. பெரியவர்கள் தினமும் குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: பெண்கள் மீசை, தாடி முளைப்பதை வீட்டிலே சரி செய்யலாம்...